சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அதே சமயம் இந்த வழக்கை சென்னை அண்ணாநகர் துணை ஆணையர் சினேகபிரியா, ஆவடி துணை ஆணையர் ஐமான் ஜமால், சேலம் துணை ஆணையர் ஆகியோர் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது.
சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஞானசேகரன் 20.01.2025 அன்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதி ஞானசேகரனுக்கு 7 நாட்கள் போலீஸ் காவல் விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும், ஞானசேகரனுக்கு போலீஸ் காவல் முடிந்த பின்னர் (7 நாட்களுக்குப் பிறகு) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட ஞானசேகரனை சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர். முதல் நாள் விடிய விடிய விசாரணை நடைபெற்றது. விசாரணையில் 6 போலீசார் தொடர்ச்சியாக ஞானசேகரனுடன் தொடர்பில் இருந்து தெரியவந்தது. ஞானசேகரனின் 6 மாத அளவிலான கால் ஹிஸ்டரிகளை ஆய்வு செய்ததில் அவர்கள் அடையாறு காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர்கள் என்பது தெரிந்தது. காசு கொடுக்காமல் அந்த 6 பேரும் ஞானசேகரன் நடத்தி வந்த பிரியாணி கடையில் பிரியாணி வாங்குவதை வாடிக்கையாக கொண்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது. அவர்களிடமும் விசாரணை நடத்த சிறப்புப் புலனாய்வுக் குழு திட்டமிட்டுள்ளது. இரண்டாம் நாளாக நேற்று அதிகாலையும் ஞானசேகரனிடம் விசாரணை நடைபெற்றது. அப்போது அதிகாலை 3 மணியளவில் ஞானசேகரனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது. தொடர்ந்து ஞானசேகரன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அண்ணா நகர் துணை ஆணையர் சினேக பிரியா ஞானசேகரனுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து நேரில் சென்று கேட்டறிந்தார். இந்நிலையில் ஞானசேகரன் வலிப்பு நாடகமாடியது தெரியவந்துள்ளது. நல்ல உடல் தகுதியுடன் ஞானசேகரன் இருப்பது தெரிந்த நிலையில் மூன்றாம் நாளாக இன்று மீண்டும் ஞானசேகரனிடம் விசாரணையை தொடங்கியுள்ளது சிறப்புப் புலனாய்வுக் குழு.