பெரியார் குறித்து சீமான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில் இன்று பெரியாரிய ஆதரவாளர்கள் சார்பில் சீமான் வீட்டை முற்றுகையிட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் சீமான் வீடு அமைந்துள்ள நீலாங்கரை பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் மே 17 அமைப்பு, தந்தை பெரியார் திராவிட கழகம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சீமானுக்கு எதிரான பதாகைகளுடன் நீலாங்கரை பகுதியில் குவிந்தனர். அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்நிலையில் கைது செய்யப்பட் சுந்தரவல்லி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''தமிழ்நாட்டில் பெரியார் மேல் கை வைத்தால் உங்களால் எந்த இடத்திலும் நடமாட விடமாட்டோம் என சீமானை எச்சரிக்கிறோம். மரியாதையாக சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லை என்றால் ஆதாரத்தை வைத்து உருட்டாமல் தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டு வேலையை பாருங்கள். அரசியலை மூட்டை கட்டுங்க. தமிழ்நாட்டின் அரசியல் அனாதை சீமான். எந்த கட்சியும் கூட்டணி சேரவில்லை என்றால் உன்னுடைய லட்சணம் அப்படி. தடியை வைத்து ஒரு நூற்றாண்டுக்கு முன்பு அரசியல் ஆணிவேரை ஆட்டிப்படைத்தவர் பெரியார். நாங்கள் வேடிக்கை இனி பார்க்க மாட்டோம். உன் தடியெல்லாம் சாதாரண தடி. நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் அரசியலே வேற'' என ஆவேசமாக பேசினார்.