
திருச்சி மாநகர காவல் ஆணையகார்த்திகேயன், திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றச் சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், தணிக்கை செய்து குற்றவாளிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள காவல் அதிகாரிகள் மற்றும் ஆணையர்களுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார்.
கடந்த 25 ஆம் தேதி பொன்மலைப்பட்டி பஜார் ஆஞ்சநேயர் கோவில் அருகில், நடந்து சென்றவரிடம் வாளை காட்டி பணம் ரூ.1000/- பறித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து ரவுடி சிவக்குமார் (எ) முகமதுரபீக், என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விசாரணையில் ரவுடி சிவக்குமார் (எ) முகமதுரபீக் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 13 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. மேலும் ஒருவரை கொலை செய்ய முயன்ற வழக்கில் தண்டனை பெற்று, நீதிமன்றத்தில் இருந்து பிணையில் வந்தது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து கடந்த 27 ஆம் தேதி ஏர்போர்ட், வயர்லெஸ் ரோடு, முல்லை நகர் சந்திப்பில் நடந்து சென்றவரிடம் கத்தியை காட்டி பணம் ரூ.500/- பறித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, வழக்கில் சம்பந்தப்பட்ட ரவுடி கௌரீஷ் (எ) நவநீதிகிருஷ்ணன் (25), என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணையில் ரவுடி கௌரீஷ் (எ) நவநீதிகிருஷ்ணன் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 10 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
எனவே, ரவுடிகள் சிவக்குமார் (எ) முகமது ரபீக் மற்றும் கௌரீஷ் (எ) நவநீதிகிருஷ்ணன் ஆகியோர்கள் தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தி பணம் பறிப்பவர்கள் என விசாரணையில் தெரிய வருவதாலும், தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் ஜி.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் மேற்படி எதிரிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இருந்து வரும் எதிரிகளுக்கு குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்தும் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.