
விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியேற்றும் இடத்தில் மட்டும்தான் அதிகாரிகள் சட்டத்தை பின்பற்றுவார்கள். வேறு எந்த இடத்தில் கொடி ஏற்றினால் அதை அதிகாரிகள் கேட்கமாட்டார்கள் என்று விசிக தலைவரும், எம்.பியுமான திருமாவளவன் வேதனை தெரிவித்துள்ளார்.
சென்னை ஆயிரம் விளக்கில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் நம்முடைய பிரதிநிதித்துவம் அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் கவனிக்கப்படுவோம். அரசியல் ரீதியாக நாம் வலிமை பெறும் போது தான் அதிகார வர்க்கத்தை நம்மால் செயல்பட வைக்க முடியும். இன்றைக்கு 4 எம்.எல்.ஏக்கள், 2 எம்.பி.க்கள் வைத்திருக்கிறோம். ஆனால் இன்றும் கொடி ஏற்றுவதில் நமக்கு பிரச்சனை இருக்கிறது. அவ்வளவு எளிதாக நம்மால் ஒரு இடத்தில் கொடிய ஏற்ற முடியவில்லை.
விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியேற்றும் இடத்தில் மட்டும்தான் அதிகாரிகள் சட்டத்தைப் பின்பற்றுவார்கள். வேறு எந்த இடத்திலும் கொடி ஏற்றினால் அதனை அதிகாரிகள் கேட்கமாட்டார்கள். பேனர் வைத்தால் உடனடியாக அகற்றுவார்கள். அதனால்தான் இன்னும் நாம் அரசியல் ரீதியாக வலிமை பெற வேண்டிய தேவை இருக்கிறது. இது போதாது என்ற போதாமையை காட்டுகிறது. அந்த வலிமையை பெறுகிற போதுதான் இவற்றை எல்லாம் நடைமுறைப்படுத்த முடியும்.
புரட்சியாளர் அம்பேத்கர் வகுத்தளித்த அரசியலமைப்பு சட்டமே இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. அரசியலமைப்பில் உள்ள சட்டங்கள் நடைமுறைக்கு வந்திருந்தால் ஒரு சமத்துவமான தேசமாக என்றோ இந்தியா பரிணாமம் அடைந்திருக்கும். ஆனால் அதுவே முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை. தேர்தல் மற்றும் அரசியல் களத்தில் மட்டுமே அரசியலமைப்பு சட்டம் நடைமுறையில் இருக்கிறதே தவிர. சமூகத் தளத்தில் பண்பாட்டுத் தளத்தில் அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வரவில்லை. சனாதன தர்மம், மனுஸ்மிருதி, வர்ணாஸ்ரமம் தான் தற்போதும் நடைமுறையில் இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.