நக்கீரன் ஆசிரியரைக் கைது செய்வதற்கு அழுத்தம் கொடுத்தது ராஜ்பவன் என்றாலும், ஜாம் பஜார் காவல்நிலையம்தான் வழக்கு பதிவு செய்தது. இது திருவல்லிக்கேணி லிமிட்டில் உள்ளது. கைது செய்த தனிப்படைக்கு தலைமை வகித்ததோ அடையாறு டி.சி. சஷாங் சாய். இவருக்கு நக்கீரன் என்றால் ஆகவே ஆகாது. இரண்டு மாதங்களுக்கு முன் தரமணியில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த கட்டிடம் இடிந்து விழுந்தபோது, களத்திற்கு முதலில் சென்ற நக்கீரன் நிருபர் மற்றும் போட்டோகிராபரை அடிக்கப் பாய்ந்தவர்தான் சஷாங் சாய். இதுகுறித்த செய்தி அப்போது நக்கீரனில் வெளிவந்தது.
விமான நிலையத்தில் கைது செய்து, ஆசிரியரை நேராக அழைத்து வந்து விசாரணை நடத்திய இடம் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையம். இச்சரகம், திருவல்லிக்கேணி டி.சி.செல்வநாகரத்தினம் கன்ட்ரோலில் வருகிறது. இவர் யாரென்றால், தூத்துக்குடியில் ஏ.எஸ்.பி.யாக இருந்தபோது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேரணியில் தடியடிப் பிரயேகம் நடத்தியவர். தோழர்கள் சுதாரித்ததால், அப்போது ஓட்டம் பிடித்தார். ஸ்டெர்லைட் பிரச்சனையிலும் வன்முறைக்கு காரணமாக இருந்தார் என்று குமுறினார்கள் தூத்துக்குடி மக்கள். இது குறித்தும் நக்கீரன் செய்தி வெளியிட்டது. சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து, நக்கீரன் ஆசிரியரை விசாரித்தவரும், கோர்ட்டுக்கு அழைத்துச் சென்றவரும் இவர்தான்.
மொத்தத்தில், ஆசிரியர் கைது விஷயத்தில், நக்கீரன் மீது வன்மம் வைத்திருக்கும் அதிகாரிகளை வைத்து, திட்டமிட்டு காய் நகர்த்தியது அரசு. ஆனால், வென்றதென்னவோ நீதிதான்!