Skip to main content

400 ஆண்டுகளுக்கு முற்பட்ட வேணாடு சேரர் காசு கண்டுபிடிப்பு!

Published on 01/02/2025 | Edited on 01/02/2025
400-year-old Venad Chera coin discovered!

சிவகங்கை அருகே 'ச' என்ற தமிழ் எழுத்துடன் மனித உருவம் அமர்ந்த நிலையில் உள்ள 400 ஆண்டுகளுக்கு முற்பட்ட வேணாடு சேரர் காசு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவநர், புலவர் கா. காளிராசா கூறும்போது, சிவகங்கையில் மன்னர் மேல்நிலைப்பள்ளிக்கும் செட்டி ஊரணி கரைக்கும் இடைப்பட்ட பகுதியில் தரை மேற்பரப்பில் இந்த காசு கண்டெடுக்கப்பட்டது. சங்க காலம் தொடங்கி 16ஆம் நூற்றாண்டு வரை இன்றைய தமிழக பகுதிகளில் சேரர் ஆட்சி நடைபெற்றுள்ளது. இன்றைய கரூரையும் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்துள்ளனர். 12ஆம் நூற்றாண்டு முதல் 16ஆம் நூற்றாண்டு வரை கன்னியாகுமரியையும் சேர்த்து வேணாடு அமைந்துள்ளது. வேணாட்டை ஆட்சி செய்தவர்கள் பல்வேறுபட்ட காசுகளை வெளியிட்டுள்ளனர், வீர கேரளன்,  கோதைரவி உதயமார்த்தாண்டன் போன்ற அரசர்கள் நாகரி எழுத்துப் பொறித்த காசுகளை வெளியிட்டுள்ளனர், பூதல வீரராமன், பூதல, சேரகுலராமன் இராமாராசா போன்ற தமிழ் எழுத்துப் பொறிப்புகள் உள்ள காசுகளும் கிடைத்துள்ளன.

ஓரெழுத்து காசுகள்: 'ச' என்ற ஓரெழுத்து மட்டுமே பொறிக்கப்பட்ட காசுகளும், மா, செ என்ற ஓரெழுத்துகள் மட்டும் பொறிக்கப்பட்ட காசுகளும் இவர்களால் வெளியிடப்பட்டுள்ளன.

சிவகங்கையில் கிடைத்த வேணாட்டு சேரர் காசு: சிவகங்கையில் கிடைக்கப்பெற்ற காசின் இரண்டு பக்கங்களிலும்  மனித உருவம் காணப்படுகிறது, ஒரு பக்கம் நின்ற நிலையில் மனித உருவம் காணப்படுகிறது, அதற்கு அருகில் மங்கலச்சின்னமான குத்துவிளக்கு காணப்படுகிறது, வலது கை பக்கத்தில் ஆறு புள்ளிகளும் இடதுகை பக்கத்தில் சில புள்ளிகளும் காணப்படுகின்றன.

காசின் மற்றொரு பக்கத்தில் அமர்ந்த நிலையில் மனித உருவமும் அவ்வுருவத்தின் இடது பக்கத்தில் ச என்ற தமிழ் எழுத்தும் கீழ்ப்பகுதியில் பத்து புள்ளிகளும் இடம் பெற்றுள்ளன.

400-year-old Venad Chera coin discovered!

செப்புக்காசு: இந்நாணயம் செம்பால் செய்யப்பட்டுள்ளது. இதன் எடை  2.5  கிராம் அளவுள்ளதாக உள்ளது.

காலம்: வேணாட்டு சேரர்கள் 12ஆம் நூற்றாண்டில் இருந்து 16ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்துள்ளனர். அக்காலத்தில் அவர்கள் பல்வேறு காசுகளை வெளியிட்டுள்ளனர், மன்னர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள காசுகளைத் தவிர மற்ற காசுகளில் மன்னர் பெயர், காலம் தெரியவில்லை இவை வேணாட்டு சேரர் காசு என்று மட்டுமே அடையாளப்படுத்தப்படுகின்றன. 

நாகர்கோவில் திருநெல்வேலி பகுதிகளில் இவ்வகை காசுகள்  கிடைத்துள்ளன. இவ்வகைக் காசு சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரையிலும் கிடைக்கப் பெற்றுள்ளது. இக்காசு குறித்த மேலாய்வில் நாணயவியல் அறிஞர் ஆறுமுகம் சீதாராமன் கூறுகையில் முன்னர் ஆங்கிலேயர்களால் இவ்வகைக் காசுகள் பாண்டியர் காசு என்று அடையாளப்படுத்தப்பட்டன பின்னரே போதிய கல்வெட்டு சான்றாதாரங்களுடன் வேணாட்டு சேரர் காசு என அடையாளப்படுத்தப்படுகிறது  என்று தெரிவித்தார்.

சிவகங்கை அரசனேரி கீழ மேடு பகுதியில் 17 ம் நூற்றாண்டு பிஜப்பூர் சுல்தான்கள் காசுகள் மூன்று காசுகள் இதற்கு முன்னாள் சிவகங்கை பகுதியில் கிடைத்து சிவகங்கை தொல்நடைக்குழு  அடையாளப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. சேர நாட்டு பகுதியில் இருந்து பல நூற்றாண்டுகளுக்கு முன் வணிகத் தொடர்பாக  இக்காசு இப்பகுதிக்கு வந்திருக்கலாம். இக்காசு கிடைத்ததில் சிவகங்கை தொல்நடைக்குழு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது என்று தெரிவித்தார்.

சார்ந்த செய்திகள்