வேதாரண்யம் அருகே உள்ள தலைஞாயிறு ஒன்றியம் ஓரடியம்புலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ள 50 ஆண்டுகளைக் கடந்த மரங்களை ஆளுங்கட்சி பிரமுகர்கள் வெட்டி விற்பனை செய்துள்ளது பொதுமக்களை வேதனைப்படச் செய்துள்ளது.
நாகை மாவட்டம், வேதாரண்யம் தொகுதிக்கு உட்பட்ட ஓரடியும்புலம் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டுவருகிறது. இந்தப் பள்ளியில் வேம்பு, கொடுக்காப்புள்ளி உள்ளிட்ட மரங்கள் சுமார் 50 ஆண்டுகளாக வளர்ந்துவருகிறது. இந்நிலையில் பள்ளி விடுமுறை தினமான சனிக்கிழமை பேரூராட்சி மன்ற உறுப்பினர் அஜய் ராஜா தலைமையில் சிலர் வந்து இந்த மரங்களை வெட்டி, மரம் அறுக்கும் பட்டறையில் விற்பனை செய்துள்ளனர்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், "மாணவர்களுக்கு நிழல் தரக்கூடிய மரங்களை வெட்டியது பெரும் கண்டனத்துக்குரியது. கடந்த 2018ஆம் ஆண்டு வீசிய கஜா புயலில் கூட விழாத அந்த மரங்களை தற்போது வெட்டியுள்ளனர். இது வேதனையானதாக இருக்கிறது" என்கிறார்கள் ஆதங்கமாக.