நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
நேற்று அதிமுக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. திமுகவும் தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதேநேரம், பாஜக கூட்டணியில் தற்போது வரை ஓபிஎஸ், தமிழ் மாநில காங்கிரசுக்கு சீட்டு ஒதுக்குவதில் இழுபறி நீடித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், திமுக கூட்டணிக் கட்சிக்கு ஆதரவளிக்க இருப்பதாக முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், 'மதவெறி சக்திகளை அடியோடு வீழ்த்தி இந்தியாவில் மத நல்லிணக்கம் மாண்புற, சமூக நீதியைக் காக்க இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும். தமிழ்நாட்டில் அடிமை துரோக கட்சியான அதிமுகவை தேர்தலில் தோற்கடிக்க நமக்கு கிடைத்த சரியான வாய்ப்பு. பாஜக எனும் பாசிச சனாதன சக்தியை வீழ்த்த நாம் அனைவரும் ஒரு குடையின் கீழ் அணியாக இணைய வேண்டியிருக்கிறது. பாஜக வென்றால் மோடி ஆட்சி இந்திய கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக் கூடாரமாக மாறிவிடும். எனவே நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்வோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.