![Wax statue of father blessing daughter wedding](http://image.nakkheeran.in/cdn/farfuture/ooQlVYCiXvc21yht52b3SquXFzpbFDnqEtcxfcBZ7wE/1654347319/sites/default/files/inline-images/th_2481.jpg)
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகில் உள்ள கனகநந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ்(56). இவர், கடந்த ஆண்டு மார்ச் மாதம் உடல்நலக்குறைவு ஏற்பட்டு செல்வராஜ் உயிரிழந்தார். பத்மாவதி மற்றும் அவரது பிள்ளைகள் செல்வராஜ் இறந்த சோகத்தில் இருந்தனர். இந்த நிலையில், தற்போது செல்வராஜின் இளையமகள் மகேஸ்வரிக்கும் திருக்கோவிலூரைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவருக்கும் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
இறந்துபோன செல்வராஜ், தனது மகள் மகேஸ்வரியின் திருமணத்தை நடத்துவதற்கு பல திட்டங்களை வைத்துவந்துள்ளார். ஆனால், திடீரென அவர் உயிரிழந்ததால், அவர் மறைவுக்குப் பிறகு மகேஸ்வரிக்கும் ஜெயராஜ் ஆகிய இருவருக்கும் திருமணம் உறுதி செய்யப்பட்டது. மகேஸ்வரி தனது தந்தை மீது அதிக பாசம் கொண்டவராக இருந்துள்ளார். இதனால், செல்வராஜ் இல்லாத குறையை போக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். மகேஸ்வரியும் தனது தந்தையை நினைத்து வருந்தியுள்ளார்.
இந்நிலையில், அவரது குடும்பத்தினர் ரூ. 5 லட்சம் செலவில் உயிரிழந்த செல்வராஜின் சிலையை மெழுகால் தயார் செய்தனர். அந்த சிலைக்கு பட்டு வேட்டி, சட்டை, மாலை அணிவித்து சோபாவில் அமர்ந்து இருப்பது போல் தத்ரூபமாக உருவாக்கி வைத்தனர். அந்த சிலை அருகில் அவரது மனைவி பத்மாவதி பட்டுப்புடவை மாலை சகிதம் அருகில் அமர்ந்து கொண்டார்.
அவரின் சிலைக்கு முன்பு மகேஸ்வரியின் திருமணம் நடந்தது. மேலும், மெழுகு சிலையால் ஆன செல்வராஜ் கையை எடுத்து மணமக்கள் தலையில் வைத்து ஆசீர்வாதம் செய்ய வைத்தனர். இந்த சம்பவம் திருமணத்திற்கு வந்திருந்த அனைவரது கண்களிலும் ஆனந்தக் கண்ணீரை வர வைத்தது. மணமகள் மகேஸ்வரி தந்தையின் தத்ரூபமான சிலையை பார்த்து கண்ணீர் வடித்துள்ளார். இந்த திருமண நிகழ்வு திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த மக்கள் மத்தியில் வியப்புடனும் பரபரப்பாகவும் பேசப்பட்டது.