உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவோர் அனைவர் குறித்தும் செய்தி வெளிவந்து விடாதுதான்! அவர்களில் குறிப்பிடத்தக்க ஒருசிலர் மட்டுமே செய்தியின் வாயிலாக வெளிப்படுகிறார்கள். அத்தகையோரில் ஒருவர்தான் அழகர்சாமி என்ற அழகு பட்டாணி. காரணம், இவர் ஒரு திருநங்கை என்பதுதான்.
![transgender competitive in local election](http://image.nakkheeran.in/cdn/farfuture/ggw9IpD8tb2mPe2e5zyPzaaxu1BU1w9JSjcqo3FPbc8/1576078849/sites/default/files/inline-images/zsaw.jpg)
விருதுநகர் அருகிலுள்ள சின்ன பேராலியைச் சேர்ந்த அழகு பட்டாணி, பெரிய பேராலி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு இன்று விருதுநகரிலுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார். 65 வயது அழகர்சாமி, கடந்த தடவையும் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, இதே தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தவர்தான்.
இன்றுவரையிலும் விவசாயக் கூலியாகவே வாழ்க்கையைத் தொடரும் அழகு பட்டாணி, தனக்கென்று எதையும் சேர்த்து வைக்காதவர். கிடைக்கின்ற கூலியைக் கூட பிறருக்காகச் செலவிடுபவர். தன்னலமற்ற இவரது குணத்தை அறிந்த கிராம மக்கள் ‘நீங்கள் போட்டியிட்டே ஆகணும்..’ என்று வற்புறுத்தியிருக்கின்றனர். “மக்களின் தூண்டுதல் காரணமாகவே நான் போட்டியிடுகிறேன்..” எனச் சொல்லும் இவர், தேர்ந்த அரசியல்வாதி ரேஞ்சுக்கு, வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என்று உறுதியளிக்கிறார்.
நல்லவர்களும் தேர்தல் களத்துக்கு வருவது நல்லதுதானே!