
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே கிளியநல்லூர் பகுதியில் உள்ள திருச்சி - சேலம் நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் கணவன், மனைவி, இரு குழந்தைகள் என 4 பேர் சென்றுள்ளனர். அப்பொழுது எதிரே வந்த அரசுப் பேருந்தும் இந்த இருசக்கர வாகனமும் எதிரெதிரே மோதி விபத்துக்குள்ளானது. இதில், தந்தை மற்றும் மகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
திருச்சி் கீழ சிந்தாமணி, வென்னீஸ் தெருவைச் சேர்ந்த முருகேசன் மகன் மணிகண்டன் (30). இவரது மனைவி மலர் (28). இவர்களின் மகன் தர்ஷன்(8), மகள் தர்ஷினி(3) ஆகிய நான்கு பேரும் கீழ சிந்தாமணியிலிருந்து இருசக்கர வாகனத்தில் மண்ணச்சநல்லூர் அருகே கரியமாணிக்கத்தில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்விற்காகச் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது திருச்சி - சேலம் சாலை, கிளியநல்லூர் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது சேலத்தில் இருந்து திருச்சி நோக்கி வந்த அரசுப் பேருந்து எதிர்பாராத விதமாக இவர்களது இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் மணிகண்டனுக்கு கால் முறிந்தது. தாய் மற்றும் 8 வயது சிறுவன் படுகாயமடைந்தனர். 3 வயதான அவரது பெண் குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தது.
விபத்தை அறிந்த அக்கம் பக்கத்தினர், அவர்களை மீட்டு சிகிச்சைககாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் படுகாயமடைந்த தாய் மற்றும் மகன் ஆகியோர் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தந்தையையும் 3 வயது குழந்தையும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், 3 வயது குழந்தை செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தது. கால் முறிந்த மணிகண்டன், திருச்சி அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பலியானார். இந்த விபத்து குறித்து வாத்தலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், அரசுப் பேருந்து ஓட்டுநர் சேலம் மாவட்டம், ஓமலூர், பெரிய ஏரி பகுதியைச் சேர்ந்த சங்கரை (38) போலீசார் கைது செய்தனர்.