ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதலாக 200 ஆக்சிஜன் படுக்கை வசதி, 200 ஆக்சிஜன் இல்லாத படுக்கை கொண்ட கரோனா வார்டை துவக்கி வைத்தார் தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கடலூர் மாவட்டத்தின் கரோனா தடுப்பு தலைமை மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இங்கு கடலூர் மாவட்டம் அல்லாமல் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து கரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஏற்கனவே மருத்துவமனையில் 350 ஆக்சிஜன் படுக்கை வசதியும், 150 ஆக்சிஜன் அல்லாத படுக்கை வசதியும் உள்ளது. இந்தநிலையில் வெள்ளிக்கிழமை தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மருத்துவமனையில் கூடுதலாக 200 ஆக்சிஜன் படுக்கை வசதி மற்றும் ஆக்சிஜன் இல்லாத 200 படுக்கை வசதி கொண்ட புதிய வார்டை திறந்து வைத்தார். மேலும் 200 ஆக்சிஜன் படுக்கை வசதி கொண்ட நோயாளிகளுக்கு தேவையான புதிய ஆக்சிஜன் சேமிப்பு மையத்தை அவர் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில். ''இந்த மருத்துவமனையில் கூடுதல் ஆக்சிஜன் படுக்கை வசதி செய்வதற்காக தமிழக முதல்வர் கவனத்திற்கு எடுத்து சென்று உடனடியாக 200 ஆச்சிஜன் படுகைக்கான ஏற்பாடு செய்துள்ளார். தற்போது கடலூர் மாவட்டத்தில் 50 சதவீதமாக தொற்று குறைந்துள்ளது. தொற்றை கட்டுப்படுத்துவதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும். கிராமப்புறங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் வீடுவீடாக உடல் வெப்பநிலை குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு ஊரடங்கு நேரத்தில் காய்கறிகள் தடையில்லாமல் கிடைக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 36,443 வண்டிகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வரப்படுகிறது. பொதுமக்கள் காய்ச்சல், சளி என்றால் உடனடியாக மருத்துவமனைக்கு வர வேண்டும். அவர்களாகவே மருந்துகளையோ அல்லது அந்த பகுதியில் உள்ள மருந்து கடைகளிலோ மருத்துவம் பார்த்துக் கொள்ளக்கூடாது'' என்றார்.
நிகழ்வில் இவருடன் சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன், வட்டாட்சியர் ஆனந்த், பல்கலைக்கழக பதிவாளர் ஞானதேவன், கல்லூரி முதல்வர் ராஜ்குமார், கண்காணிப்பாளர் சண்முகம் ஆகியோர் உடன் இருந்தனர்.