
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் 7வது ஊதியக்குழு நிலுவைத் தொகைகளையும், பி.எச்.டி. ஊக்கத் தொகையையும் உடனடியாக வழங்க வேண்டும். பல்கலைக்கழக அயல் பணியிட ஆசிரியர்களை ஆங்காங்கே உள்ளெடுப்பு செய்திடவேண்டும். பல்கலைக்கழக அனைத்து துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப அயல் பணியில் உள்ள ஆசிரியர்களைத் திரும்பப் பல்கலைக்கழகத்திற்கு அழைக்கக் கோரியும், கால முறை பதவி உயர்வுகளை வழங்கவும், ஆசிரியர் ஊழியர்களுக்கான ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்குக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சி.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். பேராசிரியர்கள் அசோகன், செல்வராஜ், செல்ல பாலு, முத்து வேலாயுதம், இமயவரம்பன், தனசேகர், காயத்ரி மற்றும் பேராசிரியர்கள் உதவி பேராசிரியர்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.
இதனைத் தொடர்ந்து அவர்கள் ஆர்ப்பாட்ட இடத்தில் இருந்து பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்திற்கு ஊர்வலமாகச் சென்று கூட்டமைப்பின் முக்கிய நிர்வாகிகள் துணைவேந்தர் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் பேராசிரியர் அருட்செல்வியை சந்தித்து கோரிக்கை குறித்து மனு அளித்தனர். இந்த மனுவைப் பெற்றுக்கொண்ட அவர் இது குறித்து அரசுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறினார்.