
தூத்துக்குடி மாவட்டத்தின் ஸ்ரீவைகுண்டம் அருகிலுள்ள அரியநாயகிபுரம் கிராமத்தைச் சேர்ந்த ப்ளஸ்1 மாணவன் சுந்தர் (மாணவனின் நலன் கருதி பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் மார்ச்10ஆம் தேதி காலை தேர்வு எழுதும் பொருட்டு தான் பயில்கின்ற பாளையிலுள்ள பள்ளிக்குச் செல்வதற்காகப் பேருந்தில் சக மாணவர்களுடன் வந்திருக்கிறான் சுந்தர். காலை 8.30 மணியளவில் பேருந்து கெட்டியம்மாள்புரத்தையடுத்து வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று பைக்கில் வந்த மூன்று பேர் பஸ்சை வழி மறித்து நிறுத்தியவர்கள், சடசடவென பஸ்சிற்குள் ஏறியவர்கள், உள்ளேயிருந்த மாணவன் சுந்தரை மிரட்டி இழுத்துக் கீழே போட்டு எதிர்பாராத விதமாக அரிவாட்களால் சரமாரியாக வெட்டியிருக்கிறார்கள். ரத்தம் கொப்பளிக்க மாணவன் கதறிக் கொண்டிருக்க என்ன, ஏது என்று பயணிகள் நிதானிக்கும் முன்னமே அந்தப் பயங்கரம் நடந்த திகிலில் சுதாரித்தவர்கள், சப்தமிட்டவாறே அவர்களைப் பிடிக்க எத்தனித்த போது மூன்று பேர்களும் தப்பியோடியிருக்கிறார்கள்.
பலத்த வெட்டுக்காயங்களால் கதறிக் கொண்டிருந்த மாணவன் சுந்தரை போலீசும் அங்குள்ளவர்களும் மீட்டு அருகிலுள்ள ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்க, அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறார். 17 வயதான மாணவன் சுந்தரின், தலை மற்றும் முதுகு உள்ளிட்ட 12 இடங்களில் வெட்டுக்கள் விழுந்திருக்கின்றன. வலது கைகளில் சிதைவு ஏற்பட்டதுடன் அரிவாள் வெட்டில் அவனின் இடது கை விரல்கள் துண்டாகியிருக்கிறது. தீவிரமாகச் செயல்பட்ட மருத்துவக்குழுவினர் மாணவருக்கு 5 யூனிட் ரத்தம் செலுத்தி ரத்தப் போக்கை கட்டுப்படுத்தி தீவிரக் கண்காணிப்பு சிகிச்சையை மேற் கொண்டுள்ளனர்.
இந்த அளவுக்கு வெறித்தனமான நிலை குலையவைக்கிற அரிவாள் வெட்டுக்கள் ஏன்? என்ன மோட்டிவ். மாணவனின் கிராமமான அரியநாயகிபுரமும், கெட்டியம்மாள்புரமும் அருகருகே உள்ளவைகள் அங்கே வெவ்வேறு சமூகங்கள் சார்ந்தவர்களிருக்கின்றனர். அரியநாயகிபுரத்திலிருக்கும் தங்ககணேஷ். அவரின் மூன்று பிள்ளைகளில் மூத்தவன் தான் சுந்தர் பிளஸ் 1 மாணவன். தந்தை தங்ககணேஷ் அவரது மனைவியும் அங்குள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வரும் கூலித் தொழிலாளிகள். தன் மகனுக்கு ஏற்பட்ட இந்தக் கதியின் காரணமாக மிரண்டு போயிருக்கும் அவர் எங்களுக்கும் அவர்களுக்கும் பிரச்சினயே கெடையாது. விளையாட்டுல தகராறு அதனால் எம்மகனை அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் வெட்டி உள்ளனர் என்று ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.
சம்பவ இடம் வந்த டி.ஐ.ஜி. மூர்த்தி எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் ஆகியோர் விசாரணை நடத்தியதுடன் சம்பவத்தில் தொடர்புடையவர்களை வளைக்க ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. ராமகிருஷ்ணன் தலைமையில் நான்கு தனிப்படைகளை அமைத்து விரைவு படுத்தியிருக்கின்றனர். பதட்டம் பரவிய அந்தப் பக்கக் கிராமங்களில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மாணவன் வெட்டப்பட்ட பயங்கரம் குறித்து விசாரித்த போது அரியநாயகிபுரத்தில் நடந்த கபடி விளையாட்டில் இங்கேயுள்ள சிறுவர்களோடு கெட்டியம்மாள்புரத்துப் பையன்களும் விளையாடியிருக்கிறார்கள். இதில் அரியநாயகிபுரத்து சிறுவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இதனால் இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த வெட்டுச் சம்பவம் நடந்திருக்கு என்கிறார்கள்.

அதே சமயம் மற்றொரு தரப்போ, அந்தக் கிராமத்தின் ஒரு பெண்ணை இந்த மாணவன் காதலித்திருக்கிறான். தனது காதலை அவன் அந்தப் பெண்ணிடம் தெரிவித்திருக்கிறானாம். இதில் ஆத்திரமான அந்தப் பெண், தனது சகோதரனிடம் இதனைத் தெரிவிக்க சகோதரனுக்கோ கடும் கொதிப்பாம். இதன் வெளிப்பாடே இந்த அரிவாள் தாக்குதல் என்றும் சொல்லுகிறார்கள். இதனிடையே தீவிரமாகச் செயல்பட்ட தனிப்படையினர் மாணவனை வெட்டிய மூன்று பேரைக் கைது செய்திருக்கிறார்கள். ஒரே பெயரைக் கொண்ட இந்த மூவரில் இரண்டு பேர் இளம் சிறார்கள் ஒருவர் 18 வயதுடையவராம். இவர்களில் ஒருவர் தான் அந்தப் பெண்ணின் சகோதரன் என்றும் தெரியவருகிறது. தன் மகன் கொடூரமாக வெட்டப்பட்டு சிகிச்சையிலிருப்பதைக் கண்டு நிலைகுலைந்து போன தந்தை தங்ககணேஷ், எங்களுக்கும் அவர்களுக்கும் பிரச்சினையே கிடையாது. நாங்க செங்கல் சூளையில வேல செஞ்சு பொழைக்கிறவுக. இப்புடி எம் மவன அரிவாளால வெட்டியிருக்காகளேய்யா. எம் பையனுக்கு நடந்த மாதிரி வேற எந்த புள்ளைக்கும் நடக்கக் கூடாதுய்யா. என்றார் கண்ணீர் வழிய உடைந்த குரலில்.

இது குறித்து மாவட்ட எஸ்.பி.யான ஆல்பர்ட் ஜானிடம் கேட்டதில் இந்த சம்பவத்தில் காதல் விவகாரம் தானிருக்கு. அவங்க மிரட்டியுமிருக்காங்க. அடுத்து இந்த சம்பவம் நடத்திருக்கு. மூன்று பேரை அரெஸ்ட் பண்ணிருக்கோம். அதில் ரெண்டு பேர் மைனர். மூன்று பேரும் ஸ்டூடன்ஸ்கள் தான். விசாரணை நடந்திட்டிருக்கு என்றார். வில்லங்கமும் விவகாரமும் இல்லாத பிரச்சினையே கிடையாது தான். தீர்விற்காக வீச்சரிவாட்களை ஒங்குவது வாழ்க்கையை சிதைத்துவிடும் என்பதை எதிர்கால இளைய தலைமுறை உணர வேண்டிய தருணமிது.