Skip to main content

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதிலடி!

Published on 11/03/2025 | Edited on 12/03/2025

 

tn Minister Anbil Mahesh response to the Union Minister Dharmendra pradhan

மத்திய அரசின் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடரின் 2ஆம் கட்ட அமர்வு நாடாளுமன்றத்தில் நேற்று (10.03.2025) தொடங்கியது. அப்போது தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக பரபரப்பான காரசார விவாதம் நடைபெற்றது. அப்போது மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் சிறிது நேரம் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், “தனது பேச்சு காயப்படுத்தி இருந்தால் அநாகரிகமானவர்கள் என்ற வார்த்தையைத் திரும்பப் பெறுகிறேன்” எனத் தெரிவித்தார்.

இத்தகைய சூழலில் தான் மாநிலங்களவையில் தேசிய கல்விக் கொள்கை மீதான விவாதம் இன்று (11.03.2025) நடைபெற்றது. அப்போது மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசுகையில், “நான் கூறிய கருத்து யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அதற்காக 100 முறை கூட மன்னிப்பு கேட்கத் தயாராக இருக்கிறேன். தேசிய கல்விக் கொள்கை மூலம் எந்த மொழியையும் மத்திய அரசு திணிக்க முயலவில்லை. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் எதிரானது இல்லை. தமிழை நானும் விரும்புகிறேன். தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் படிப்போர் எண்ணிக்கை குறைந்து வருகிறார்கள். காலனித்துவ மொழியான ஆங்கிலம் ஆதிக்கம் பெற்று வருகிறது.

அதாவது தமிழக அரசுப் பள்ளிகளில் தமிழ்மொழிக் கல்வி சரிவைச் சந்தித்து வருகிறது. இந்தியாவின் வரலாற்றைப் பற்றி பெருமிதம் கொள்ளாதவர்களை நாம் என்ன செய்வது?. திமுக எம்.பி.க்கள் தனி உலகத்தில் வாழலாம். ஆனால் இதுவே உண்மை ஆகும். இந்தி கற்க ஆர்வமாக உள்ளதாக நாமக்கல்லைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறினார். இதுவே புதிய தமிழ்நாடு. தமிழகத்தில் உள்ள 774 சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் இந்தி பயிற்றுவிக்கப்படுகிறது. அதே சமயம் 900 பள்ளிகளில் தெலுங்கு மற்றும் 350 பள்ளிகளில் உருது 3வது மொழியாகப் பயிற்றுவிக்கப்படுகிறது. தமிழகத்தில் சிறுபான்மையினருக்காக 1500 பள்ளிகள் உள்ளன” எனப் பேசினார்.

மேலும் பி.எம். ஸ்ரீ பள்ளித் திட்டம் தொடர்பாகத் தமிழக அரசு சார்பில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அப்போதைய தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா எழுதிய கடிதம் ஒன்றையும் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு  பதிலடி கொடுக்கும் வகையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களுக்கு, தவறான தகவல்களைப் பரப்புவதால் உண்மைகள் மாறாது. எங்களது வெற்றிகரமான கல்வி மாதிரியை குறைந்த மதிப்பிற்கு உட்படுத்துவதால்,  தேசிய கல்விக் கொள்கையை (NEP 2020) தமிழ்நாடு தொடர்ந்து எதிர்த்து வருகிறது.

tn Minister Anbil Mahesh response to the Union Minister Dharmendra pradhan

இந்த நிலைப்பாட்டில் திடீர் மாற்றம் எதுவும் இல்லை. 15/3/2024 தேதியிட்ட கடிதம் தேசிய கல்விக் கொள்கையின் ஒப்புதல் அல்ல. மாணவர்களுக்கு நன்மை பயக்கும் போது மட்டுமே தமிழ்நாடு மத்திய அரசின் திட்டங்களில் ஈடுபடுகிறது. ஆனால் அது எந்த திட்டத்தையும் அல்லது கட்டமைப்பையும் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்வதாக அர்த்தமல்ல. அந்தக் கடிதம் தெளிவாகக் குறிப்பிடுவது என்னவென்றால், ஒரு குழு அமைக்கப்படும், மேலும் குழுவின் முடிவுகள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் அதைச் செயல்படுத்துவது குறித்து நாங்கள் முடிவு செய்வோம் என்பதாகும்.

tn Minister Anbil Mahesh response to the Union Minister Dharmendra pradhan

யார் அரசியலில் விளையாடுகிறார்கள் என்றால், அது தேசிய கல்விக் கொள்கையை (NEP) திணித்து தமிழ்நாட்டின் கலாச்சாரத்தையும் மரபையும் சிதைக்க முயல்பவர்கள்தான். தமிழ்நாட்டின் கல்வி அமைப்பு முன்மாதிரியானது மற்றும் நமது மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் திறனைத் தொடர்ந்து நிரூபித்துள்ளது. இந்தியாவின் பன்முகத்தன்மை அதன் பலம், பலவீனம் அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.  தமிழ்நாட்டின் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு எது சிறந்தது என்பதைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை அங்கீகரித்து ஆதரிப்பதன் மூலம், நீங்கள் உண்மையில் தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கும் அதன் மாணவர்களுக்கும் ஒரு சிறந்த சேவையைச் செய்ய முடியும்” எனப் பதிவிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்