சென்னையில் இருந்து தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வளைகாப்பிற்காக கொல்லம் விரைவு ரயிலில் சென்னையைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் மனைவி கஸ்தூரி (வயது 21) என்ற பெண் ஒருவர் பயணித்துள்ளார். இவர் 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இவர் பயணித்த இந்த ரயில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே சென்று கொண்டிருந்த போது கஸ்தூரிக்கு வாந்தி வந்ததால் காற்றோட்டமாக ரயிலின் கதவு ஓரத்தில் நின்று வாந்தி எடுக்க முற்பட்டபோது ரயிலில் இருந்து தவறி விழுந்தாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அவரது உறவினர்கள் ரயிலின் அபாயச் சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்த முயற்சித்தபோது அபாய சங்கிலி வேலை செய்யாததால் சுமார் 10 நிமிடங்கள் கழித்து 8 கி.மீ. தூரம் தள்ளிச் சென்று ரயில் நின்ற இடத்திலிருந்து பின்னோக்கி வந்து கர்ப்பிணியை அவரது உறவினர்கள் தேடியுள்ளனர். அதன் பின்னர் சுமார் 2 மணி நேர தேடலுக்குப் பின் உளுந்தூர்பேட்டை அருகே கர்ப்பிணி கஸ்தூரி சடலமாக மீட்கப்பட்டார். நாளை மறுநாள் (05.05.2024) வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் கர்ப்பிணி தவறி விழுந்து உயிரிழந்தது அவரது உறவினர்களிடம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி பெண் உயிரிழந்த விவகாரம் குறித்து தெற்கு ரயில்வே விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. ரயில் பெட்டியில் அபாய சங்கிலி வேலை செய்யவில்லை என புகார் எழுந்த நிலையில் உரிய விசாரணை நடத்த திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் உத்தரவிட்டுள்ளார். அதே சமயம் உயிரிழந்த பெண் ஏன் ரயில் பெட்டியின் கதவு அருகே சென்றார் என்பது குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி உயிரிழந்தது தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த கஸ்தூரிக்கு திருமணமாகி 9 மாதங்களே ஆவதால் இது குறித்து விசாரணை நடத்த திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் (R.D.O - ஆர்.டி.ஓ.) கண்ணனுக்கு இருப்புப்பாதை போலீசார் கடிதம் எழுதியுள்ளனர்.