சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே. சாலையைச் சேர்ந்தவர் கார்த்தி(42). இருதய அறுவை சிகிச்சை நிபுணரான இவர், சென்னை மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார். இவர், ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையில் உள்ள தனது தாய் மாமாவின் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தார். இவருடைய தந்தை உலகநாதன், மருத்துவராகப் புதுச்சேரியில் வசித்து வருகிறார். கார்த்தியின் தாய் கஸ்தூரிக்கு முதுமை காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கார்த்தியின் தங்கை தீபா, அமெரிக்காவில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். மேலும், அவர் தனது கணவன் மற்றும் குழந்தைகளுடன் அமெரிக்காவிலேயே வசித்து வருகிறார்.
இந்த நிலையில், கார்த்தி அமெரிக்காவில் உள்ள தனது தங்கை தீபாவுடன் தினமும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசுவது வழக்கமாக வைத்துள்ளார். அதன் அடிப்படையில், கடந்த 19 ஆம் தேதி தீபா கார்த்திக்கை செல்போனில் அழைத்துள்ளார். ஆனால், அவர் அழைப்பை எடுக்கவில்லை. தொடர்ந்து இரண்டு நாள்களாக தன்னுடைய அண்ணன் கார்த்திக்கை அழைத்தும், அவர் அந்த அழைப்பை எடுக்கவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த தீபா, தன்னுடைய நண்பரான ஸ்ரீவித்யா என்பவரை தொடர்பு கொண்டுள்ளார். மேலும், அவரிடம் இது குறித்து தகவல் தெரிவித்து வீட்டுக்கு நேரில் சென்று பார்க்கும்படி கூறியுள்ளார். இதையடுத்து ஸ்ரீவித்யா, கார்த்தியின் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது வீடு திறந்த நிலையில் இருந்துள்ளது. மேலும், அவர் கதவைத் திறந்து வீட்டுக்கு உள்ளே சென்றபோது அதிகமாக துர்நாற்றம் வீசியிருக்கிறது.
இதனால் சந்தேகம் அடைந்த ஸ்ரீவித்யா, வீட்டின் அறைக்குச் சென்று பார்த்துள்ளார். அங்கு, கார்த்தி நாற்காலியில் உட்கார்ந்த நிலையிலேயே கைகளில் ரத்தம் வெளியேறியவாறு பிணமாகக் கிடந்துள்ளார். மேலும், கார்த்தியின் உடல் அழுகிய நிலையில் இருந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த ஸ்ரீவித்யா தேனாம்பேட்டை காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் கொடுத்தார். ஸ்ரீவித்யா கொடுத்த தகவலின் பேரில், உதவி ஆணையர் பிரகாஷ்ராஜ், காவல் ஆய்வாளர் ஆனந்த் பாபு, உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அங்கு சென்ற காவல்துறையினர், கார்த்தி தனது இரண்டு கைகளிலும் டிரிப்ஸ் ஏற்றும் ஊசியால் குத்தப்பட்டு, உடலில் இருந்து ரத்தம் வெளியேறி அறை முழுக்கச் சிதறி இருந்துள்ளதைப் பார்த்துள்ளனர். அதன் பின்னர் உயிரிழந்த கார்த்தியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் கார்த்தியின் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது, கார்த்தி இறப்பதற்கு முன்பு தன் கைப்பட எழுதி அறையில் வைத்திருந்த ஒரு கடிதத்தைக் கைப்பற்றினர். அந்தக் கடிதத்தில், “எனது வாழ்க்கை அழகாக முடிவுக்கு வந்தது. எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை” என்று எழுதப்பட்டிருந்திருக்கிறது.
இந்த சம்பவம் தொடர்பாக தேனாம்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அவர்கள் நடத்திய விசாரணையில், கார்த்தி பொதுமக்களுக்கு சேவை செய்யும் மனப்பான்மையால் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்துள்ளார். மேலும், கொரோனா பேரிடர் காலத்தில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது, அவருக்கு 3 முறை கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு உதவிப் பேராசிரியராக ராஜீவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் பணியில் சேர்ந்துள்ளார். இதனையடுத்து, சில மாதங்களாக இதயத்தில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக சிகிச்சை பெற்று வந்துள்ளார் என்று காவல்துறையினருக்குத் தெரியவந்தது. இதனையடுத்து, கார்த்தியின் இறப்பு குறித்து பல்வேறு கோணங்களில் தேனாம்பேட்டை காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவ பேராசிரியர் ஒருவர் வீட்டில் பிணமாகக் கிடந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.