சென்னையில் மேம்பால கட்டுமானப் பணிகள் காரணமாக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை தி.நகர் தெற்கு உஸ்மான் மேம்பாலத்திலிருந்து சிஐடி 1 ஆவது மெயின்ரோடு வரை மேம்பால கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக தி.நகர் தெற்கு உஸ்மான் சாலை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் செப்.27 வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
இது குறித்து போக்குவரத்து காவல்துறையினர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது, “தி.நகர் தெற்கு உஸ்மான் சாலை மேம்பாலத்திலிருந்து தெற்கு உஸ்மான் சாலை வழியாக அண்ணா சாலை, சிஐடி 1வது மெயின் ரோடு செல்லும் வாகனங்கள் தடை செய்யப்பட்டு, கண்ணம்மா பேட்டை சந்திப்பு, தெற்கு மேற்கு போக்குவரத்து சாலை, மூப்பராயன் தெரு இணைப்பு சாலை வந்து அண்ணா சாலையை அடையலாம்.
தெற்கு உஸ்மான் சாலை மேம்பாலத்திலிருந்து வரும் மாநகர பேருந்துகள், தெற்கு உஸ்மான் சாலை வழியாக செல்ல தடை செய்யப்பட்டு மேட்லி சந்திப்பு, பர்கிட் சாலை, மூப்பராயன் தெரு, இணைப்பு சாலை வந்து அண்ணா சாலையை அடையலாம். அரங்கநாதன் சுரங்கப்பாதையிலிருந்து தெற்கு உஸ்மான் சாலை வழியாக அண்ணா சாலை சிஐடி 1வது மெயின் ரோடு செல்லும் வாகனங்கள் தடை செய்யப்பட்டு, மேற்கு சிஐடி நகர் வடக்கு தெரு வழியாக வந்து அண்ணா சாலையை அடையலாம்.
அண்ணா சாலை சிஐடி 1வது மெயின்ரோடு சந்திப்பிலிருந்து தெற்கு உஸ்மான் சாலை வழியாக தி.நகர் பேருந்து முனையத்துக்கு செல்லும் வாகனங்கள் வழக்கம் போல செல்லலாம்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.