தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு நீண்டநாட்களாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மீண்டும் லாட்டரி விற்பனை தொடங்க உள்ளதாகக் கூறி சில தினங்களுக்கு முன்பு அதனைக் கண்டித்து எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், "திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன், அரசுக்கு வருவாயைப் பெருக்கும் வழி எங்களுக்குத் தெரியும் என்று கொக்கரித்தவர்கள், லாட்டரி சீட்டை மீண்டும் கொண்டுவந்து நாட்டைச் சுடுகாடாக்க முடிவு செய்துள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது. எனவே, லாட்டரி சீட்டை மீண்டும் இந்த அரசு கொண்டுவர முயற்சிக்க வேண்டாம்" என குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், தற்போது இதுதொடர்பாக தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்துள்ளார், அதில், "கட்டுக்கதைகளைக் கூறி முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் நிர்வாகத் திறமைக்கு களங்கம் விளைவிக்க வேண்டாம். அரசு லாட்டரி விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளது என்று கூறுவது கற்பனை கதை. அதிமுக சீரழித்த நிதி நிலைமையை சரிசெய்ய லாட்டரி பற்றி நாங்கள் சிந்திக்கவே இல்லை. லாட்டரி விற்பனை செய்ய முயற்சி என பொய் அறிக்கை வெளியிட்டுள்ளார். இவ்வாறு கட்டுக்கதைகளைக் கூற வேண்டாம்" என்று தெரிவித்துள்ளார்.