திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாகப் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னையில் நாளை (06.08.2023) காலை 04.00 மணி முதல் 11.00 மணி வரை, கின்னஸ் உலக சாதனை படைக்கும் வகையில் 1063 திருநங்கைகள் உட்பட 75,000 பேர் பங்கேற்கும் 'கலைஞர் நூற்றாண்டு மாரத்தான் - 2023' என்ற மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் கலந்துகொண்டு பங்கேற்று வெற்றி பெறுவோருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 9 பிரிவுகளின் கீழ் 10.70 இலட்சம் மதிப்பிலான பரிசுகளை வழங்க உள்ளார். மேலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த போட்டியில் பங்கேற்கும் திருநங்கைகளுக்கு ஊக்கப்பரிசு வழங்க உள்ளார்.
இந்நிலையில் கலைஞர் நூற்றாண்டு நினைவு மாரத்தான் போட்டியை ஒட்டி சென்னையில் சில இடங்களில் நாளை காலை 03.00 மணி முதல் 11.00 மணி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ராஜாஜி சாலையில் இருந்து வரும் வாகனங்கள் ரிசர்வ் வங்கி சுரங்கப் பாதை வழியாகச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது. அவ்வாறு வரும் வாகனங்கள் பாரீஸ் கார்னர், என்.எப்.எஸ். சாலை, முத்துச்சாமி பாலம், வாலாஜா பாயிண்டிலிருந்து வலது புறம் திரும்பி அண்ணாசாலையில் வெல்லிங்டன் பாயிண்ட் வழியாகச் செல்ல வேண்டும்.
வாலாஜா பாயிண்டில் இருந்து அண்ணாசிலை சந்திப்பு வரை உள்ள வலதுபுற சாலை இருவழிப் பாதையாகச் செயல்படும். வாகனங்கள் அண்ணாசிலையில் இருந்து வாலாஜா சாலை செல்ல அனுமதி இல்லை. அவ்வாகனங்கள் பெரியார் சிலை மற்றும் பாட்டா சந்திப்பு வழியாகச் செல்ல வேண்டும். வாகனங்கள் பாரதி சாலை, டாக்டர் பெசன்ட் சாலை மற்றும் லாய்ட்ஸ் சாலையிலிருந்து காமராஜர் சாலை செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது. அவ்வாகனங்கள் ஐஸ் அவுஸ் சந்திப்பு மற்றும் ரத்னா கஃபேயிலிருந்து திருப்பி விடப்பட்டு டாக்டா நடேசன் சாலை செல்ல அனுமதிக்கப்படும். சாந்தோம் நெடுஞ்சாலையில் இருந்து வரும் வாகனங்கள் சாந்தோம் நெடுஞ்சாலை x காரணீஸ்வரர் பக்கோடா தெரு சந்திப்பில் திருப்பப்பட்டு காரணீஸ்வரர் பக்கோடா தெரு வழியாக டாக்டர். நடேசன் சாலை, டாக்டர். ராதாகிருஷணன் சாலை வழியாகச் செல்ல வேண்டும்.
மியூசிக் அகாடமியிலிருந்து காந்தி சிலை நோக்கி வரும் வாகனங்கள் வி.எம். சாலை சந்திப்பில் திருப்பப்பட்டு வி.எம்.சாலை வழியாக ராயப்பேட்டை நெடுஞ்சாலை, லஸ் கார்னர், ராமகிருஷ்ண மடம் சாலை வழியாகச் செல்ல வேண்டும். அண்ணாசாலையில் வரும் கனரக வாகனங்கள் ஸ்பென்சர் சந்திப்பிலிருந்து அண்ணாசிலை செல்ல அனுமதி இல்லை. ஸ்பென்சர் சந்திப்பிலிருந்து பின்னி சாலை மற்றும் மார்ஷல் ரோடு வழியாகச் செல்ல வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.