திருச்சி கே.கே. நகரை சேர்ந்தவர் பெரியநாயகம் மகன் சந்தோஷ். இவருக்கு தனது தந்தை பெயரில் உறையூர் சவேரியார் கோவில் தெருவில் சொந்தமாக வீடு ஒன்று உள்ளது. அந்த வீட்டை வாடகைக்கு விட முடிவு செய்து மருத்துவமனை நடத்துவதற்கு வாடகைக்கு விட்டுள்ளார். அதன் காரணமாக தனது வீட்டின் மின் இணைப்பை, வீட்டு மின் இணைப்பில் இருந்து வணிக மின் இணைப்பாக மாற்றுவதற்கு தென்னூர் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு உறையூர் பகுதி கணக்கீட்டாளர் ஜெயச்சந்திரன் என்பவர், "உங்களுடைய வீட்டை வணிகப் பயன்பாட்டிற்கு வாடகைக்கு விட்டுள்ளீர்கள். நான் அது குறித்து அறிக்கை அளித்தால் உங்களுக்கு 80 ஆயிரம் ரூபாய்க்கு மேல் அபராதம் வரும். அது வராமல் இருக்க வேண்டும் என்றால் 15 ஆயிரம் ரூபாய் எனக்கு லஞ்சமாக கொடுத்தால் தான் மின் கட்டண முறையை மாற்றம் செய்து கொடுக்க முடியும்" என்று கூறியுள்ளார். அதற்கு சந்தோஷ், "நான் ஏற்கனவே கட்டண முறையை மாற்றுவதற்கு உரிய மனு அளித்துள்ளேன். எனவே, அந்த மனுவின் அடிப்படையில் மாற்றிக் கொடுங்கள். என்னால் அவ்வளவு பணம் தர இயலாது" என்று கூறியுள்ளார். மேலும், ஜெயச்சந்திரன், "3000 ரூபாய் குறைத்துக் கொண்டு 12 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் தான் கட்டண மாற்றம் செய்து கொடுப்பேன்" என்று கூறியுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத சந்தோஷ் திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறையில் இதுகுறித்து புகார் அளித்தார். புகாரையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான குழுவினர் சந்தோஷுக்கு அளித்த ஆலோசனையின் பெயரில், சந்தோஷிடமிருந்து ஜெயச்சந்திரன் ரூபாய் 12000 லஞ்சமாகக் வாங்கும் போது, தென்னூர் மின்வாரிய அலுவலகத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஜெயச்சந்திரனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இதனால் மின்வாரிய அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.