வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த உமராபாத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தேமுதிக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கலந்துகொண்டு கேக் வெட்டினார்.
அதே மேடையில் ஏழை, எளிய பெண்களுக்கு தையல் இயந்திரங்கள், சலவைப் பெட்டிகள் இரண்டு லட்ச ரூபாய் மதிப்பில் வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள் வழங்கிய பின்னர் பேசிய விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன், தேமுதிக தலைவர் விஜயகாந்த் நன்றாக உள்ளார். தன்னுடைய பிறந்த நாளில் தன்னை பார்க்க வந்த பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். 2
020ஆம் ஆண்டு தை மாதத்திற்கு பின்னர் கேப்டன் எப்படி மீண்டு வருகிறார் என்பதைப் பாருங்கள் எனச்சொன்னவர், அதன்பின்னர் பேசமுடியாமல் மேடையில் தொண்டர்களுக்கு மத்தியில் கண்ணீர்விட்டு அழுதபடியே பேச தொடங்கியவர், விஜயகாந்த் உடல்நிலை சீராகவும், நன்றாகவும் உள்ளது. ஆனால் அனைவரும் அவருடைய உடல்நிலை குறித்து அவதூறாக பேசிவருகிறார்கள். அவை அனைத்தையும் தாங்கிக்கொண்டு என்னுடைய தாயார் பிரேமலதா கட்சியை வழி நடத்தி வருகிறார். எனவே தொண்டர்கள் யாரும் கலங்க வேண்டாம், கவலைப்பட வேண்டாம்.
தேர்தலில் அனைவருக்கும் வெற்றி தோல்வி சஜகம். இந்த வெற்றி தோல்வி என்பது 5 ஆண்டுகள் தான். மக்கள் நம்மை தூக்கி எறிந்தாலும், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், வெற்றியாக இருந்தாலும் தோல்வியாக இருந்தாலும் கேப்டன் விஜயகாந்த் மீண்டும் சுவற்றில் எறிந்த பந்தை போன்று மக்கள் சேவை செய்ய மக்களை தேடி விரைவில் குணமடைந்து வருவார் என்று கண்ணீர் விட்டு அழுதவாறு பேசினார்.
அப்போது மேடையில் அமர்ந்திருந்த தேமுதிக நிர்வாகிகள் அவரை அழ வேண்டாம் என்று சமாதானப்படுத்தினர். மேடைக்கு எதிரே அமர்ந்திருந்த தொண்டர்கள் மத்தியில் இந்த கண்ணீர் பேச்சு ஒரு சோகத்தை ஏற்படுத்தியது.