சுபமுகூர்த்த தினங்கள் எனக் கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும். இதனால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அந்த வகையில் ஆனி மாதத்தின் கடைசி சுபமுகூர்த்த தினமான நேற்று (12.07.2024) அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பல்வேறு தரப்பு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டன.
இதனையடுத்து ஆனி மாதத்தின் கடைசி சுபமுகூர்த்த தினமான நேற்று (12.07.2024) ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் வழங்கப்பட்டன. அதோடு அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகள் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டன.
இதன்படி தமிழகம் முழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் ஆவணப்பதிவுகள் நடைபெற்றன. இந்நிலையில் தமிழக அரசின் பதிவுத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் நேற்று (12.07.2024) ஒரே நாளில் மட்டும் பத்திரப்பதிவு மூலம் ரூ. 224.26 கோடி வருவாய் தமிழக அரசுக்கு கிடைத்துள்ளது. அதன்படி நேற்று ஒரே நாளில் மட்டும் 20 ஆயிரத்து 310 ஆவணங்கள் பதிவாகியுள்ளன எனத் தமிழக பத்திரப்பதிவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.