தமிழ்நாட்டில் செயல்படும் அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லையென்று 46 பள்ளிகளை மூட முடிவு எடுத்துள்ளது தமிழ்நாடு அரசு. இந்நிலையில் வரும் 10 ந்தேதிக்குள் தமிழகம் முழுவதும் உள்ள 46 தொடக்க நடுநிலைப்பள்ளிகளை மூட முனைப்புக் காட்டும் அரசு, அப்பள்ளிகளில் மாணவர்கள் ஏன் சேரவில்லை என்பதை ஆராய தவறியது வருத்தமளிக்கிறது என்கிறார்கள் ஆசிரியர்கள். இதன் தொடர்பாக பேசிய ஆசிரியர் சங்க தலைவர் பி.கே. இளமாறன் கூறுகையில் அரசு பள்ளிகளை மூடுவதற்கு முன்பாக மூடுவதற்கான காரணத்தை இந்த அரசு ஆராய்ந்து அதை தடுத்து நிறுத்தாமல், அரசு பள்ளிகளை மேம்படுத்திடவும் புதியதாக தொடங்கும் மெட்ரிக் பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிக்கக்கூடாது என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அதுமட்டுமில்லாமல் தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க அனைவருக்கும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி 25% இட ஒதுக்கீடு அடிப்படையில் அரசே முன்வந்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் பெற்று மாணவர்களை சேர்த்துவிடுவது மட்டுமின்றி 100 கோடி ரூபாய்க்கும் மேலாக கட்டணமும் வழங்கிவருவது வேதனையளிக்கிறது.
இதுபோன்று ஆண்டுக்கு 1,21,000 மாணவர்களை தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு தாரை வார்த்துவிட்டு அரசு பள்ளிகளில் மாணவர்கள் இல்லை. அதனால் பள்ளிகளை மூடிவிட்டு நூலகங்களாக மாற்றுவது ஏற்புடையது அல்ல. இந்நிலை நீடித்தால் எதிர்காலத்தில் அரசு பள்ளிகள் அனாதையாகிவிடுவதோடு மூடப்படும் அபாயம் ஏற்படும். ஆகையால் தமிழக அரசு அரசு பள்ளிகளை மூடுவதை கைவிட்டுவிட்டு போதிய வசதியின்றி அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 3000 க்கும் மேற்பட்ட தனியார் மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்த்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அப்படி செய்தால் இது போன்று நடக்காது . அதை விட்டு விட்டு மேலும் பள்ளிகளை மூடினால், ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்த தயங்க மாட்டோம் என்றார்.