நாகையில் பெண் காவலர் ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த நாகூர் காவல் நிலைய காவலர் கைது செய்யப்பட்டிருக்கிறார். கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயிலைச் சேர்ந்த பெண் காவலர் ஒருவர் நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று (14.03.2021) காவல் நிலைய பணியை முடித்துவிட்டு நாகையில் உள்ள ஆயுதப்படை காவலர் குடியிருப்பு வளாகத்திற்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு குடியிருக்கும், நாகூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் சிவக்குமார், பெண் காவலரை வலுக்கட்டாயமாக தடுத்து நிறுத்தி, தவறாக நடக்க முயற்சி செய்திருக்கிறார்.
இதை சற்றும் எதிர்பார்த்திடாத அப்பெண் காவலர், அடித்துப்பிடித்து அங்கிருந்து தப்பிச்சென்று நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதனை அங்குள்ள போலீசார் விசாரித்து பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவுசெய்து சிவக்குமாரை கைது செய்துள்ளனர்.
தமிழக கூடுதல் டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ், காவல்துறையின் உயர் பொறுப்பில் இருந்த பெண் எஸ்.பி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் தமிழகத்தையே உலுக்கிவருகிறது. அந்த அனல் குறைவதற்குள் காவலர் ஒருவர், பெண் காவலருக்குப் பாலியல் தொல்லை கொடுத்து கைதாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.