அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்கள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை கிண்டியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, "எனக்கு எதிராக தமிழக அரசு விசாரணைக்குழு அமைத்தது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழக அரசின் விசாரணை பற்றி எனக்குக் கவலை இல்லை. எதையும் சந்திக்கத் தயார். என் மீதான புகார்கள் குறித்து, தமிழக அரசின் குழு விசாரிக்கட்டும். எனது வங்கிக் கணக்கு விவரங்களை யார் வேண்டுமானாலும் சரிபார்த்துக் கொள்ளலாம். எனது பதவிக்காலத்தில் எப்போதும் உச்சபட்ச நேர்மையைக் கடைப்பிடித்துள்ளேன். ஐ.ஐ.டி.யில் பணியாற்றி வந்த எனது மகளை, இங்கு பணியில் அமர்த்தியது நன்மைக்கே. அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு பைசா கூட முறைகேட்டில் ஈடுபடவில்லை. ஆளுநர் உள்பட யாரையும் நான் சந்திக்கப் போவதில்லை. பெயர் குறிப்பிடாமல் சில மிரட்டல் கடிதங்களும் எனக்கு வந்துள்ளன.
பணி நியமனத்தில் எந்த முறைகேட்டிலும் நான் ஈடுபடவில்லை. மிரட்டல்களுக்கு அடிபணியாததால் என் மீது அவதூறு புகார்களைக் கூறுகின்றனர். என் மீது பழிவாங்கும் நடவடிக்கையை தமிழக அரசு எடுக்கிறதா என்பதைக் கல்வியாளர்கள் கூற வேண்டும். என் மீதான புகார்களில் உண்மை இல்லை என்று அனைவருக்கும் தெரியும். புகார்களால் அண்ணா பல்கலைக்கழகத்திற்கான எனது பணிகளுக்கு முட்டுக்கட்டை போட முடியாது." இவ்வாறு சூரப்பா தெரிவித்துள்ளார்.