
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஜூலை 27 தமிழகம் முழுவதும் அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்றும் போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.
சிதம்பரத்தில், அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவின் சிதம்பரம் பகுதியின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் கோ. மாதவன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் வி.எம் சேகர், அனைத்து விவசாய சங்க கூட்டமைப்பு மாநில செயலாளர் டி. ரவீந்திரன், காவிரிப்படுகை பாதுகாப்பு விவசாய சங்க தலைவர் இளங்கீரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி விவசாய அணி செயலாளர் சக்கரவர்த்தி, தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட துணை தலைவர் ராமச்சந்திரன், மூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் முசா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, நகர செயலாளர் ராஜா, இந்திய தேசிய காங்கிரஸ் நகர தலைவர் பாலதண்டாயுதபாணி, விடுதலை சிறுத்தைகள் நகர செயலாளர் ஆதிமூலம், திராவிட கழக மாவட்ட செயலாளர் சித்தார்த்தன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக நகர செயலாளர் ராஜராமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் தமிழ்முன் அன்சாரி, சிபிஎம் கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் வாஞ்சிநாதன், மாவட்ட குழு முத்து, வாலிபர் சங்க நகர செயலாளர் ராஜராஜன்உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தற்போது மத்திய,மாநில அரசுகள் விவசாயிகளுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவதை கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பேசினார்கள்.
இதில் மின்சார வரைவு திருத்தச்சட்டம் 2020, அத்தியாவசிய பொருட்கள் திருத்தச்சட்டம் 2020, வேளாண் பொருட்கள் வணிக ஊக்குவிப்பு (மேம்பாடு மற்றும் உறுதி செய்து கொடுத்தல்) அவசர சட்டம் 2020, விவசாயிகளுக்கான விலை உத்தரவாதம் & வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசர சட்டம் 2020 ஆகியவற்றை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தை, கடலூர் மாவட்டத்தின் அனைத்து கிராமங்களில் நடத்துவது, ஜூலை 27 தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனைத்தொடர்ந்து சிதம்பரம் வடக்கு வீதி தலைமை தபால் அலுவலகம் முன்பு மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிரான இரண்டு அவசர சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஒரு கோடி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் பாலா. அறவாழி துவக்கி வைத்தார். காங்கிரஸ் கட்சி பொதுக்குழு உறுப்பினர் சித்தார்த்தன், நகர துணைத் தலைவர் லட்சுமணன் உள்ளிட்ட ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் இதில் பங்கேற்று கையெழுத்திட்டனர்.