கோவை மாவட்ட இரும்பு வியாபாரிகள் சங்கத்தின் பவளவிழாவில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தெலங்கானா ஆளுநர் தமிழிசை ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசுகையில், "தமிழிசை குடும்பம் பாரம்பரியமான காங்கிரஸ் குடும்பம். ஆனால் தமிழிசை பாஜகவில் சேர்ந்து, எடுத்த கொள்கையில் உறுதியோடு இருந்து, இந்த நிலைக்கு வந்து உள்ளார்.முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழிசை வெற்றி பெற்றிருந்தால் மத்திய அமைச்சராகி தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்திருப்பார். துணிச்சலாக பேசக்கூடிய தமிழிசை, ஜெயலலிதாவின் அன்பை பெற்றவர். இதற்கு முன்னால் எத்தனையோ அரசுகள் இருந்துள்ளது. ஆனால் இந்த 5 ஆண்டுகளில் 50 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு திட்டங்கள் செய்யப்பட்டு உள்ளது" என்றார்.
இதைத்தொடர்ந்து பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், "இரும்பு என்று சொன்னால் வலிமை, சக்தி, உறுதி என்று பொருள். மாநிலங்களை ஒருங்கிணைக்க முயற்சி செய்த சர்தார் வல்லபாய் பட்டேல் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுகிறார். அதே போல தமிழகத்தில் நடைபெற்ற ஊழல் ஆட்சிகளை அடக்கி ஒடுக்கியவர் ஜெயலலிதா. அதனால் தான் இரும்பு பெண்மணி என்று ஜெயலலிதா அழைக்கப்படுகிறார். ஆளுநர் தமிழிசை நீண்ட அரசியல் பாரம்பரியத்திலிருந்து வந்தவர். கட்சி விசுவாசம் மற்றும் கடுமையான உழைப்பால் உயர்ந்த பதவியை தமிழிசை அடைந்துள்ளார். தமிழ் திருநாட்டின் திருமகள் தமிழிசை" என்று தெரிவித்தார்.
பின்னர் பேசிய ஆளுநர் தமிழிசை," பிறந்த வீடின் பலமும் எனக்கு உள்ளது, புகுந்த வீட்டின் பலமும் இருக்கிறது. அதனால் தான் ஆளுநர் ஆகி உள்ளேன். அனைவருக்கும் தெரியும் நான் பாஜக தலைவராக அறிவிக்கப்பட்ட உடன் சில நிமிடங்களில் தகவல் அழைப்பாளர் அனுப்பி வாழ்த்து கடிதம் அனுப்பியது ஜெயலலிதா. இன்னொரு கட்சி தலைவரை ஜெயலலிதா வாழ்த்தியது, வாழ்த்து கடிதம் பெற்றது நான் ஒருவராக தான் இருக்க முடியும். மக்களுக்கு எதாவது செய்ய வேண்டும் என்பதற்காக தான் இறைவன் ஆளுநர் பதவியை தந்துள்ளான். பிறந்த குழந்தைகளுக்கு பரிசு பெட்டகம் வழங்கும் தமிழக அரசு திட்டத்தை, தெலுங்கானா ஏற்று கொண்டு செயல்படுத்தி வருகிறது" என்று தெரிவித்தார்.