‘இருக்கிற இடம் தெரியாம இருந்துட்டு போயிருவோம்..’ என்ற கொள்கை(?) பிடிப்புடன் உள்ள ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் பலரை நாம் பார்த்திருப்போம். ராஜபாளையம் திமுக எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் அந்த ரகமல்ல.
![He is the MLA. - Good thangapandian](http://image.nakkheeran.in/cdn/farfuture/fEjB9YrI4ploXKvzxPK6-dGc7dntPNg8_sSesvdXmhk/1586092399/sites/default/files/inline-images/a%20%282%29.jpg)
‘பொதுமக்களுக்கு ஒரு லட்சம் முக கவசங்கள் வழங்கும் திமுக எம்.எல்.ஏ.’ என்னும் தலைப்பில், இன்று நமது இணையத்தில் செய்தி வெளியிட்டிருந்த நிலையில், “எம்.எல்.ஏ. இன்னும் என்னென்ன நல்ல காரியங்கள் செய்திருக்கிறார் தெரியுமா?” என்று ராஜபாளையம் தொகுதியிலிருந்து அவர் குறித்து உடன்பிறப்புகள் சிலாகித்து சொன்ன தகவல்கள் இதோ - ‘ராஜபாளையம் தொகுதியிலுள்ள நியாய விலை கடைகளில் வழங்கப்படும் அரிசியில் கருப்பு அதிக அளவில் இருப்பதால், மக்கள் அதைச் சமைத்து சாப்பிட முடியாது..’ என்று புகார் வர, கிருஷ்ணாபுரம் ஊராட்சியிலுள்ள நியாய விலை கடை, ராஜபாளையம் வார்டு 4-ல் உள்ள நியாய விலை கடை, ஆவாரம்பட்டியிலுள்ள நியாய விலை கடை என ஒரு ரவுண்ட் வந்து ஆய்வு மேற்கொண்ட எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன், உடனடியாக டி.எஸ்.ஓ.வை தொடர்புகொண்டு அரிசியை மாற்றி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக, தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு, சட்டமன்ற உறுப்பினரான தனது 44-வது மாத ஊதியம் ரூ.1,05,000-ஐ RTGS மூலம் வழங்கியிருக்கிறார். ‘தங்கமான மனிதர்.. எம்.எல்.ஏ. என்றால் இவர்போல் இருக்க வேண்டும்’ என விருதுநகர் மாவட்ட உடன்பிறப்புகள் மத்தியில் நல்ல பெயர் எடுத்திருக்கிறார், தங்கப்பாண்டியன்!