இந்திய அளவில் ஜவுளி உற்பத்தியில் முதன்மை மாநிலமாக விளங்குவது நமது தமிழ்நாடு தான். கைத்தறி மற்றும் விசைத்தறிகள் மூலமே ஜவுளி உற்பத்தி நடந்து வருகிறது. மின்சாரக் கட்டணம் உயர்வு விசைத்தறி தொழில் புரிவோருக்கு கூடுதல் சுமையும் அளவுக்கு அதிகமான நெருக்கடியையும் ஏற்படுத்தி வந்தது.
இந்நிலையில் தான் இத்தொழிலில் ஈடுபடும் மக்களின் வாழ்வியல் நிலையை கருத்தில் கொண்டு விசைத்தறிகளுக்கு 500 யூனிட் இலவச மின்சாரம் என 2006ல் திமுக ஆட்சியில் முதல்வர் கலைஞர் அறிவித்தார். தொடர்ந்து அது 750 யூனிட் மின்சாரம் இலவசம் என இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் விசைத்தறிகளுக்கு ஏற்கனவே உள்ள 750 யூனிட்டில் இருந்து கூடுதலாக 250 யூனிட் அதிகப்படுத்தி 1000 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தது. அது நடைமுறைக்கு வரும் நேரத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வந்தது. அதை காரணம் காட்டி கூடுதல் இலவச மின்சாரத்தை திமுக அரசு அறிவிக்கக் கூடாது என அதிமுக தலைமையில் உள்ள எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதினார். ஆகவே அது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இடைத்தேர்தல் முடிவு திமுக கூட்டணிக்கு வெற்றி என்ற அறிவிப்பு வந்தவுடன் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் முன்னெடுப்பில் விசைத்தறிகளுக்கான கூடுதல் மின்சாரம் பற்றி முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதன் பிறகு 3ம் தேதி முதல் தேர்தல் அறிவிப்பாக திமுக வாக்குறுதி படி, விசைத்தறிகளுக்கு மேலும் 250 யூனிட் அதிகப்படுத்தி மார்ச் 1ம் தேதி முதல் மொத்தமாக 1000 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அரசு உத்தரவிட்டது. அரசின் இந்த அறிவிப்பு விசைத்தறி தொழிலில் ஈடுபடும் பல லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது. கால தாமதப்படுத்தாமல் கொடுத்த வாக்கை உடனடியாக நிறைவேற்றிய தமிழக முதல்வருக்கு நன்றி கூறி, அவருக்கு பாராட்டு விழாவையும் நடத்துகிறார்கள் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள். வருகிற 11 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு கோவை அருகே உள்ள கருமத்தம்பட்டி என்ற இடத்தில் "விசைத்தறிகளுக்கு மின் கட்டண சலுகை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றியும் பாராட்டும்" என்ற தலைப்பில் விழா நடத்துகிறார்கள் அச்சங்கத்தினர்.
இந்த விழாவுக்கு நேரடியாக வந்து கலந்துகொண்டு ஏற்புரை நிகழ்த்த உள்ளார் முதல்வர் மு.க. ஸ்டாலின். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னின்று செய்து வருகிறார் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சரும் மின்துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி. இந்த விழாவில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், சு.முத்துசாமி, ஆர்.காந்தி, கயல்விழி செல்வராஜ் மற்றும் எம்.எல்.ஏக்கள் திருச்செங்கோடு ஈஸ்வரன், திருப்பூர் செல்வராஜ், ஈரோடு ஈவிகேஸ். இளங்கோவன் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள். மக்கள் நலன் சார்ந்த அறிவிப்பு என்பது தாமதம் இல்லாமல் அறிவிக்கப்பட்டதோடு அத்திட்டத்தில் பயன்பெறுவோரும் அப்படி அறிவித்த முதல்வருக்கு தாமதம் இல்லாமல் நன்றி பாராட்டும் விழா நடத்துவது சாலச் சிறந்தது.