தமிழகக் கூடுதல் தலைமைச் செயலாளர்/ போக்குவரத்து ஆணையர் இன்று (15/03/2021) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி, தேர்தல் பிரச்சாரத்திற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு, பதிவு எண் பொருத்தப்பட்ட பயணிகள் வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாறாக, பதிவு செய்யாத வாகனங்களைப் பயன்படுத்தினால் கீழ்க்கண்ட நடவடிக்கைகள் வாகன உரிமையாளர் மற்றும் வாகன விற்பனையாளர் மீது போக்குவரத்துத்துறை மற்றும் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
பதிவு செய்யாமல் ஒட்டப்படும் வாகனங்கள் மோட்டார் வாகனச் சட்டம் 1988 பிரிவு 39 மற்றும் பிரிவு 207-ன் படி குற்றத்திற்காகச் சிறைபிடிக்க வாகனம் தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகள் 1989, விதி 421-ன் கீழ் அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்படும். மோட்டார் வாகனச் சட்டம் 1988 பிரிவு 192-ன் கீழ் அபராதம் நீதிமன்றத்தால் விதிக்கப்படும்.
மோட்டார் வாகனச் சட்டம் 1988 பிரிவு 192 (B) (1)- ன் கீழ் வாகன உரிமையாளர் பிரிவு 41 (1) படி பதிவுக்கு முறையாக விண்ணப்பிக்காததால் அபராதமாக வாகனத்தின் 5 மடங்கு ஆண்டு வரி அல்லது மூன்றில் ஒரு பங்கு ஆயுட்கால வரி, இதில் எது அதிகபட்சமாக உள்ளதோ அதை நீதிமன்றத்தால் விதிக்கப்படலாம்.
மோட்டார் வாகனச் சட்டம் 1988 பிரிவு 192 (B) (2)- ன் கீழ் வாகன விற்பனையாளர் பிரிவு 41 (1)- ன் படி பதிவு செய்யாமல் வாகனத்தை விற்றதால் அபராதமாக வாகனத்தின் 15 மடங்கு ஆண்டு வரி அல்லது வாகனத்தின் ஆயுட்கால வரி, இதில் எது அதிகபட்சமாக உள்ளதோ அதை நீதிமன்றத்தால் விதிக்கப்படலாம்.
மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989, விதி 44- ன் கீழ் விற்பனையாளரின் வணிகச் சான்று தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ ரத்து செய்யப்படும். எனவே பதிவு செய்யாத வாகனத்தைப் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தினால் மோட்டார் வாகனச் சட்டத்தின் படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வாகன உரிமையாளர்கள் மற்றும் வாகன விற்பனையாளர்கள் எச்சரிக்கப்படுகிறார்கள்" இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.