மகாராஷ்டிர மாநிலம் புல்சாவல் பகுதியை சார்ந்தவர் மெல்வின் தேஷ்முக். இவர் ரயில்வே காவல் துறையில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது குடும்பத்தாரோடு மகாராஷ்டிராவில் இருந்து பெங்களூருக்கு காரில் சுற்றுலா வந்துள்ளார். கர்நாடகாவின் பல பகுதிகளுக்கு சென்றவர்கள், பின்னர் கார் மூலமாக வேலூருக்கு சுற்றுலா வந்துள்ளனர். வேலூருக்கு வந்து தங்ககோயில் உட்பட பல பகுதிகளை பார்த்து ரசித்துவிட்டு மே 6ந்தேதி இன்று மதியம் பெங்களூர் நோக்கி காரில் புறப்பட்டனர்.
இவர்களது கார் வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெங்கிளி கிராமம் அருகே செல்லும்போது, சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஓரமாக கண்டெய்னர் லாரி நின்றிருந்தது. வேலூரில் இருந்து வந்த தேஷ்முக்கின் காரின் முன் பக்க டயர் வெடித்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் நின்றிருந்த கண்டெய்னர் லாரியின் பின் பக்கத்தில் மோதியதில் காரில் பயணித்த மெல்வின் தேஷ்முக் உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர்.
இந்த இடர்பாடுகளில் சிக்கிய உடல்களை ஆம்பூர் தாலுக்கா போலிஸார் சம்பவயிடத்துக்கு வந்து மீட்டனர். இதில் தேஷ்முக் உட்பட 4 ஆண்கள், இரண்டு பெண்கள், 1 குழந்தை உடல்கள் நசுங்கிய நிலையில் இருந்தது. அந்த உடல்களை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். உடல்களை மீட்கும்போது அவர்களுக்கு கிடைத்த அடையாள அட்டையை கொண்டு இரயில்வே போலிஸார் மூலமாகவும், தாங்களும் இறந்தவர்கள் மாநில போலிஸாருக்கு, வேலூர் மாவட்ட காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
சென்னை - பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலைகளின் ஓரம் நோ பார்க்கிங் பகுதியில் கனரக வாகனங்கள் அங்காங்கு நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனை தடுக்க வேண்டிய நெடுஞ்சாலை ரோந்து போலிஸார் 50, 100 ரூபாய் என மாமூல் வாங்கிக்கொண்டு கண்டுக்கொள்வதில்லை. சாலையை பராமரிக்கிறோம் எனச்சொல்லி வாகன கட்டணம் பெறும் சுங்கச்சாவடி நிர்வாகங்களும் கண்டுக்கொள்வதில்லை. அதனாலயே இதுப்போன்ற விபத்துக்கள் நடக்கின்றன என்கின்றனர் வாகன ஓட்டுநர்கள்.