பட்ஜெட் கூட்டத்தொடரின் ஐந்தாவது நாளான இன்று (20/02/2020) "காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்க வகை செய்யும் சட்ட மசோதாவை முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
மசோதா குறித்து விளக்கமளித்த முதல்வர் பழனிசாமி, "பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மசோதாவுக்கு முழு ஒத்துழைப்பு தர மத்திய அரசிடம் கடிதம் தரப்பட்டது. சம்மந்தப்பட்ட மத்திய அமைச்சரிடம் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். சட்ட வல்லுநர்களை ஆலோசித்து குறுகிய காலத்தில் இச்சட்டத்தை தாக்கல் செய்துள்ளோம். அரசு எடுத்த நடவடிக்கைகளால் வேளாண் தொழில் செழித்துள்ளது.
![TN ASSEMBLY CM SPEECH AGRICULTURE LAND PROTECTED BILL PASSED](http://image.nakkheeran.in/cdn/farfuture/uvTuSGLfwAsnArj3AHYT4BSzc0wLQuMYv_yPYU2oaHw/1582195209/sites/default/files/inline-images/CM9999_0.jpg)
விவசாயிகளின் பிரச்சனை என்ன என்பதை அறிந்து கொண்டு நடவடிக்கை எடுக்கிறோம். டெல்டாவில் நடைமுறையில் உள்ள திட்டங்களை நிறுத்தினால் சட்ட சிக்கல்கள் உருவாகும். திருச்சி தொழிற்சாலை நிறைந்த பகுதி என்பதால் அதை வேளாண் மண்டலத்திற்குள் கொண்டு வரவில்லை. கரூர், திருச்சி, அரியலூரின் ஒரு சில பகுதிகளை வேளாண் மண்டலத்தில் இணைத்துள்ளோம். தஞ்சை,நாகை, திருவாரூர் மாவட்ட விவசாயிகள் பிரதிநிதிகளாக குழுவில் இடம் பெறுவர்." இவ்வாறு முதல்வர் பேசினார்.
இதனிடையே பேசிய ஸ்டாலின், "பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற அறிவிப்பை திமுக வரவேற்கிறது. மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்பினால் முழு வெற்றியை பெறும்" என்றார்.