![tmc uyaraja statement](http://image.nakkheeran.in/cdn/farfuture/ulD--cw7RSo9EHZ_K5jhkxEEUkj5shPnOvomGS5FrLA/1596305272/sites/default/files/inline-images/dafZSAGVDBV_1.jpg)
வங்கிகளில் பொதுமக்கள் பெற்ற கடனுக்கான வட்டி தொகைகளைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணித் தலைவர் யுவராஜா வேண்டுகோள் வைத்துள்ளார் இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"கரோனா வைரஸ், உலகம் முழுதும் பெருந்தொற்றாகப் பரவி, பல துன்பங்களையும், பெருமளவு உயிர் சேதத்தையும் விளைவித்து வருகிறது. நம் நாட்டில், அரசு, பல கட்டங்களாக ஊரடங்கை அமல்படுத்தி, கரோனா தொற்று அதிகமாகாமல் தடுக்க சில முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. ஆனால், ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாலும், நிதி நெருக்கடி ஏற்பட்டதாலும் நிவாரணம் வழங்கும் வகையில் பொதுமக்கள் வங்கிகளில் வாங்கிய மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான கடன் தவணைகளைச் செலுத்த ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை மட்டுமே சலுகை வழங்கப்பட்டது.
இந்தச் சலுகை என்பது ஆறு மாதங்களுக்கும் கடன் தவணை ரத்து செய்யப்பட்டுவிட்டதாக பலரும் தவறாக புரிந்துகொண்டுள்ளனர். ஆனால், ஆறு மாதத்திற்கான கடன் தவணைகளை தாமதமாகச் செலுத்துவதற்கு கூடுதல் கால அவகாசம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதுவரை கடன்கள் ரத்து செய்யப்படுவதாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆறு மாதங்களுக்கும் வட்டி கூட ரத்து செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், இதை எல்லோரும் தவிர்த்துவிட முடியாது. நெருக்கடியைச் சமாளிக்க இந்தச் சலுகையைப் பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை. எனவே இது ஒரு தற்காலிக நிவாரணம் மட்டுமே தவிர, ஆகஸ்ட் மாதத்திற்குப் பின் ஒட்டுமொத்தமாக சுமை அதிகரிக்கும். இந்த ஆறு மாத காலத்திற்குக் கடன்களை ரத்து செய்ய முடியாவிட்டாலும் பரவாயில்லை. வட்டித் தொகையாவது ரத்து செய்யலாம். இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இவ்வழக்கில் ரிசர்வ் வங்கி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில், “கூடுதல் கால அவகாசம் அளிக்கப்பட்டது கடனைத் தாமதமாக செலுத்துவதற்கான அவகாசம் மட்டுமே தவிர கடன் தள்ளுபடி அல்ல. ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் ஏற்ப கடன் தொகை மாறுவதால் வட்டி விவகாரத்தில் வங்கிகளே முடிவெடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. கடன் பெற்றவர்களுக்கு சுமையைக் குறைக்க மட்டுமே இந்தக் கால அவகாசம் உதவும்” என்று தெரிவித்துள்ளது.
தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் மூலம் பெறப்பட்ட கடன் தவணைகளுக்கு இந்த ஆறு மாதகாலத்திற்கு வட்டித்தொகை முழுவதையும் ரத்து செய்யவேண்டுமென த.மா.கா. இளைஞரணி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்" எனக் கூறியிருந்தார் மேலும் அவர் நம்மிடம் "மக்களின் வாழ்வாதார நிலையை மத்திய, மாநில அரசுகள் புரிந்து கொள்ள வேண்டும் சாதாரன ஏழைத் தொழிலாளி முதல் தொழிலதிபர்கள் வரை பொருளாதார நெடுக்கடியில் இருப்பதை யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மக்களைக் காக்கும் பொறுப்பு அரசுக்கு தான் உள்ளது. மத்திய பா.ஜ.க. அரசுக்கு இந்த ஆறு மாத கால வட்டித் தொகையைத் தள்ளுபடி செய்ய தமிழக அரசு எடுத்துரைக்க வேண்டும்" என்றார்.