திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்டராம்பட்டு ஒன்றியத்தில் உள்ள 28 கவுன்சிலர்களில் 16 கவுன்சிலர்களோடு திமுக பெரும்பான்மையாக இருந்த நிலையில் 12 கவுன்சிலர்களோடு பெரும்பான்மையில்லாமல் இல்லாமல் இருந்த அதிமுக கவுன்சிலர்கள், ஒன்றிய குழு தலைவர் தேர்தலின்போது சாலை மறியல் செய்து பிரச்சனை செய்தார்கள்.
இதனால் போலீஸார் தடியடி நடத்தி அதிமுக கவுன்சிலர்கள் மற்றும் கட்சியினரை அப்புறப்படுத்தினர். இதனால் தேர்தல் அதிகாரி தேர்தலை நடத்தாமல் வெளிநடப்பு செய்தார். அதேபோல் துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் திமுக கவுன்சிலர்கள் 10 பேர் இருந்த நிலையில் அதிமுக, பாமக கவுன்சிலர்கள் பிரச்சனை செய்ய தேர்தல் நிறுத்தப்பட்டது.
இந்த இரண்டு ஒன்றியங்களுக்கான தேர்தல் மற்றும் 4 ஒன்றியங்களின் துணை தலைவர் தேர்தல் 17 ஊராட்சி மன்ற துணை தலைவர் தேர்தல் எப்போது என மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கந்தசாமியிடம், ஜனவரி 13ந்தேதி செய்தியாளர்கள் கேட்டபோது, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளது. அது எப்போது நடத்துவது என மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்கும் நாளில் தேர்தல் நடத்தப்படும் என்றார்.
துரிஞ்சாபுரத்தில் தேர்தல் நடத்துவதற்கான கவுன்சிலர்களின் கோரம் இல்லாததால் தேர்தல் நிறுத்தப்பட்டது. தண்டராம்பட்டில் மட்டும் மாவட்ட எஸ்.பியின் அறிக்கையின்படி, தேர்தல் நடத்தினால் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்படும் என்பதால் தேர்தல் நிறுத்தப்பட்டது.
அவரிடம், நிர்வாக காரணங்களுக்காக தேர்தல் நிறுத்தப்பட்டதாக தண்டராம்பட்டு ஒன்றிய தேர்தல் அலுவலர் அறிவித்து நோட்டீஸ் ஒட்டியுள்ளதே எனக்கேட்ட செய்தியாளர்களிடம், சட்டம் ஒழுங்கு பிரச்சனை தான் காரணம் என்றார்.