திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி தாலுக்காவுக்கு உட்பட்ட திம்மாம்பேட்டை மேல் கோபம் கொண்ட பகுதியைச் சேர்ந்தவர் மணி. விவசாய கூலி தொழிலாளியான மணி, தினமும் தான் சம்பாதிக்கும் பணத்தில் அதிகளவு மதுகுடிக்க செலவு செய்து வந்துள்ளார்.
இதுகுறித்து குடும்பத்தார் மணியிடம் பலமுறை கூறியும் அவர் தன் குடிப்பழக்கத்தை மட்டும் கைவிடவில்லை, கரோனா மக்களின் வாழ்வாதாரத்தைச் சிதைத்துள்ள நிலையில் மணியின் குடும்பத்தார் பணமில்லாமல் அதிகமாகவே சிரமப்பட்டு வந்துள்ளனர். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது.
இந்நிலையில் ஜூலை 16- ஆம் தேதி இரவு கணவன் குடித்துவிட்டு வர மனைவி ஆரஞ்சு, கணவரிடம் சண்டை போட்டுள்ளார். இந்தச் சண்டை ஒரு கட்டத்தில் இருவருக்கும் உச்சத்திற்குச் சென்றது . அப்பொழுது படுத்திருந்த மனைவி மீது குடிபோதையில் கல்லைத் தூக்கிப் போட்டு மனைவியைக் கொலை செய்துள்ளார். மனைவி இறந்துபோனது கூடத் தெரியாமல் மணி அப்படியே படுத்து உறங்கியுள்ளார்.
ஜூலை 17- ஆம் தேதி விடியற்காலை எழுந்து பார்த்தபோது தனது மனைவியைத் தானே கொலை செய்து இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்து அழுதுள்ளார். பின்னர் அங்கிருந்து கிளம்பி திம்மாம்பேட்டை காவல் நிலையத்திற்குச் சென்று நடந்ததைக் கூறியுள்ளார். அதையடுத்து, அவரை கைது செய்து காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைத்த போலீசார், உடனடியாகச் சம்பவ இடத்திற்கு வந்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உண்மையில் குடிபோதையில் தான் கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? எனப் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.