நடு இரவில் முன் பகை காரணமாக சித்தா டாக்டர் ஒருவர் கடத்திக் கோரத்தனமாகக் கொல்லப்பட்டிருக்கிறார். இதில் கூலிப் படைக்கு தொடர்புண்டா என்ற கோணத்தில் விசாரணை போகிறது.
நெல்லை மாவட்டத்தின் திசையன்விளை அருகே மேல பண்டாரபுரத்தை சேர்ந்தவர் திருப்பதி (34). ஹோமியோபதி டாக்டரான திருப்பதி தினமும் காலை முதல் மதியம் வரை சாத்தான்குளத்திலும், மதியம் முதல் இரவு வரை திசையன்விளை பேரூராட்சி எதிரேயுள்ள கிளினிக்கிலும் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்துவிட்டு பைக்கில் திரும்புபவர். சம்பவ தினமான நேற்று முன்தினம் இரவு கிளினிக் வேலைகளை முடித்துவிட்டு தன் கிராமத்திற்கு பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தார்.
இட்டமொழியிலிருந்து மேல பண்டார புரம் செல்லும் சாலைவிலக்கு அருகே வந்தபோது, அங்கு பதுங்கியிருந்த மர்ம நபர்கள் திடீரென்று பைக்கை மறித்துத் தள்ளி, திருப்பதியை அரிவாளால் சராமாரியாக வெட்டிப் படுகொலை செய்துள்ளனர். சம்பவ இடத்திலேயே பலியான திருப்பதியின் வயிற்றுப் பகுதியில் கொடூரமாக வெட்டப்பட்டுள்ளதாம். பின்னர் பைக்கையும் அவரது உடலையும் கிணற்றில் வீசிவிட்டுச் சென்றிருக்கிறது மர்மகும்பல்.
இரவு நேரமாகியும் திருப்பதி வராததால் அவரது சகோதரர்கள், உறவினர்கள் இரவு அவர் வழக்கமாக வரும் பாதையில் தேடியுள்ளனர். விலக்குச் சாலையில் ரத்தக் கறையும் தலைமுடியும் கிடந்ததால் பதறியவர்கள் தொடர்ந்து பார்த்ததில் கிணற்றில் பைக்கும் உடலும் கிடந்ததால் அதிர்ச்சியானார்கள். டாக்டரின் சகோதரர் ரமேஷ் புகார் தர, ஸ்பாட்டுக்கு வந்த திசையன்விளை இன்ஸ்பெக்டர் ஜூடி தலைமையிலான போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் இரவு வெகுநேரம் போராடி உடலையும், பைக்கையும் மீட்டனர். உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இன்ஸ்பெக்டர் வழக்குப் பதிவு செய்து, விசாரணையைக் கிளப்பியிருக்கிறார்.
திருப்பதிக்கும் மற்றொரு தரப்பினருக்குமிடையே இடத்தகராறு இருந்துவருவது தொடர்பான சிவில் வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது. எதிர்தரப்பினரால் இந்தக் கொலைச் சம்பவம் நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக தந்தை, மகன் உட்பட 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமான டாக்டர் திருப்பதிக்கு ஷீபா என்ற மனைவியும், இரண்டரை வயதில் பெண் குழந்தையும், பிறந்து 40 நாட்களே ஆன மற்றொரு பெண் குழந்தையும் உள்ளனர். பிள்ளைகளோடு தாய்வீடு சென்றிருந்த மனைவி ஷீபா, கொலை செய்தியறிந்து இளம் பிள்ளைகளோடு கதறியது பரிதாபம்.
இந்தக் கோரம் கூலிப்படையால் நடத்தப்பட்டிருக்கலாம் என்று திடமாக நம்பும் போலீசார், அந்தக் கோணத்திலும் பார்வையை திருப்பியுள்ளனர். கரோனாவின் கொடூரம் ஒரு பக்கம், மாவட்டத்தில் கூலிப்படையின் ரீஎன்ட்ரீ மறுபக்கம்.