திருநெல்வேலி மாவட்டம் களக்காடு நகரை ஒட்டிய பகுதியைச் சேர்ந்த ஒருவர், தன்னிடம் இருக்கும் வைடூரிய கற்களை விற்பதற்காக பல நாட்களாக முயன்றவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஃபோன் மூலமாக பார்ட்டி ஒருவரிடம் விலையைச் சொல்லியிருக்கிறார். ஆறு கோடி விலையில் ஆரம்பித்து பின் படிப்படியாக ஐந்தரை கோடி பின் ஐந்து கோடி என்ற லெவலில் பேரம் போயிருக்கிறதாம். ஆனாலும் இந்த டீலிங் முடியாமல் போயிருக்கிறது. இந்நிலையில் இந்த டீலிங் பற்றிய தகவல்கள் மெல்லக் கசிந்து நகர உளவுப் பிரிவான எஸ்.பி.யின் தனிப்பிரிவு போலீசார் காது வரை போயிருக்கிறதாம். அதனையடுத்து உஷாரான இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் உள்ளிட்ட போலீசார் பிப்ரவரி 8 அன்று மலையடிவாரத்திலுள்ள மஞ்சுவிளை பகுதியிலிருக்கும் அந்த வீட்டிற்குள் திடீரென புகுந்து சோதனையிட்டிருக்கிறார்கள். வீட்டிலிருந்த அந்த இரண்டு நபர்களும் போலீசாரைக் கண்டு மிரள, சோதனையில் அவர்கள் மறைத்து வைத்திருந்த அரை கிலோ எடையிலான வைடூரிய கல்லை பறிமுதல் செய்திருக்கிறார்கள்.
அவர்களின் தொடர் விசாரணையில் மஞ்சுவிளையைச் சேர்ந்த முன்னாள் வனக்குழு தலைவரான சுசில்குமார் மற்றும் வைடூரிய கற்களை விலை பேசிய கீழப்பத்தையைச் சேர்ந்த வேல்முருகன் என்பதும் தெரிய வந்திருக்கிறதாம். தவிர பிடிபட்ட வைடூரிய கற்கள், பாறை துகள்கள் ஒட்டியபடி மின்னிக் கொண்டிருந்ததால் வைடூரிய கற்கள் கடத்தல், வனத்துறை சம்பந்தப்பட்ட வழக்கு என்பதால் இருவரையும் கைது செய்த இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் அவர்களையும் பறிமுதல் செய்யப்பட்ட அரை கிலோ எடையுள்ள வைடூரியக் கற்களையும் களக்காடு வனத்துறையினரிடம் ஒப்படைத்திருக்கின்றனர்.
இந்தப் பறிமுதல் குறித்துப் பல்வேறு தரப்பினரிடம் விசாரித்த நாம், வைடூரியம் தொடர்பான மதிப்பு பற்றி முக்கிய வைர வியாபாரிகளிடம் நடப்பு மதிப்பு வியாபாரத்தைக் கேட்டதில், தற்போதைய சந்தை நிலவரப்படி ஒரு கிராம் வைரத்தின் விலை இரண்டு லட்சம் என்றார்கள். தோராயமாக பார்த்தாலும் பிடிபட்ட வைடூரியக் கற்களின் கசடு போக குறைந்தது அதன் மதிப்பு எட்டு கோடி வரையிலும் போகலாம். மேலும் சிக்கியவரோ அடித்தட்டு வர்க்கம் சார்ந்தவர். களக்காடு பகுதியில் தென்மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மஞ்சுவிளை கிராமத்தின் முன்னாள் வனக்குழு தலைவர். மலை, மற்றும் அதிலடங்கியுள்ள கனிம வளம் பற்றி துல்லியமாக அறிந்தவர் என்பது தான் களக்காடு நகரவாசிகளின் அதிர்வுக்கு காரணம் என்கிறார்கள். பல ஆயிரம் ஆண்டுகளாக நாடு முழுக்க பரந்து விரிந்து கிடக்கும் தென் மேற்கு தொடர்ச்சி மலையின் ஒவ்வொரு மண்டலப் பகுதியும் விலை மதிக்க முடியாத கனிம வளத்தைக் கொண்டது. குறிப்பாக தென் மாவட்டமான களக்காடு பகுதியின் தென் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிப்பாறைகள் விலை மதிப்புள்ள வைடூரியக் கற்களை கொண்டது என்பது நாடறிந்த ரகசியம்.
1992களின் போது களக்காடு மலையின் அடர்வனக்காடான வெண்கலப்பாறைப் பீட் பகுதியில் வைடூரிய கற்கள் வெட்டி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்ச்சியாக நடந்திருக்கிறது. குறிப்பாக மலையின் அடுத்த மேற்குப் பகுதியை ஒட்டிய கேரளாவின் கும்பல்கள் அங்கிருந்தே களக்காடு மலை பகுதிக்குள் ஊடுருவி முகாமிட்டபடி இறுகிப் போன பாறைப் பகுதிகளை ஆழமாகத் தோண்டிய பாறைகளை வெடி வைத்து தகர்த்தும் வைடூரியக் கற்களை வெட்டியெடுத்துக் கடத்தியிருக்கிறார்கள். அது சமயம் வெடிச் சத்தமும் கிளம்பும் தீப்பிழம்புகளும் மலையடிவாரக் கிராமங்களில் எதிரொலித்திருக்கின்றன. இது, விவகாரமாக உருவெடுத்த போது கண்காணிப்பில் ஈடுபட்ட வனத்துறையினருக்கும், கேரள கடத்தல் கும்பலுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு சம்பவமும் நிகழ்ந்ததுண்டு. அதனையடுத்து நடந்த வனத்துறை அதிகாரிகளின் பல்வேறு கோணங்களின் விசாரணையில் இந்த வைரக் கடத்தல் கும்பலுடன் ஒரு வன அதிகாரியின் தொடர்பு தெரியவர பின்பு அந்த அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.
காலப் போக்கில் களக்காடு வனப்பகுதி புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டு தடை செய்யப்பட்ட ஏரியாவாகி அது வனத்துறையின் இணை இயக்குநரின் பொறுப்பின் கீழ் வரவே வைடூரியக் கல் வெட்டிக் கடத்தல் சற்று குறைந்தது. தடை செய்யப்பட்ட பகுதி என்றாலும், மறுபக்கம் வைரக் கடத்தலும் ஓசையின்றி தொடர்ந்த வண்ணம் இருந்திருக்கிறது. இது குறித்த புகார்கள் அடுக்கடுக்காக அரசு வரை போகவே அரசும் உயரதிகாரிகளின் விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது. களக்காடு வனப் பகுதிகளை ஆய்வு செய்த அதிகாரிகளின் குழுவும் மலையின் பீட் பகுதிகளில் வைரக்கல் வெட்டி எடுப்பதற்காக குழிகள் தோண்டப்பட்டிருப்பதாக அரசுக்கு அறிக்கை அளித்துள்ளனராம்.
அதன் பின்பும் கடத்தல் சம்பவங்கள் தலை தூக்கவே, களக்காடு வனப்பகுதியில் அந்நியர்களின் நடமாட்டமிருக்கிறது. மீண்டும் வைரக்கல் வெட்டிக் கடத்தப்படுவதாகவும் தெரிகிறது. ஏற்கனவே ஆய்வு செய்த அதிகாரிகள் மலையில் வைரக்கல் வெட்டியெடுப்பதற்காக 41 குழிகள் தோண்டப்பட்டதாக அறிக்கை கொடுத்துள்ளனர். ஆனாலும் நடவடிக்கை இல்லை. மலையிலுள்ள மதிப்புமிக்க வைரக் கனிம வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று 26.08.2022ன் போதே நெல்லை கலெக்டர் மற்றும் உயரதிகாரிகளுக்கு சமூக நல அமைப்புகள், விவசாய அமைப்புகள் உள்ளிட்ட நாங்கள் மனுக் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இப்போது வைடூரியக் கற்கள் பிடிபட்டதின் மூலம் மீண்டும் வைரக்கல் கடத்தல் தலையெடுக்கிறதா என்று கேள்வியாகிறது என்கிறார் இப்பகுதியின் தமிழ்நாடு விவசாய சங்க மாநில தலைவரான பெரும்படையார்.
இது குறித்து நாம் களக்காடு வனத்துறையின் துணை இயக்குநரான ரமேஷ்வரனை தொடர்பு கொண்டு கேட்டதில், "எங்களிடம் ஒப்படைக்கப்பட்ட இருவரில் சுசில்குமார் என்பவரிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் வைத்திருப்பது வைரம். அவரின் அப்பா கொடுத்ததாகச் சொல்லுகிறார். அவற்றைச் சோதனை செய்தும் பார்த்திருக்கிறார்கள். ஆனால் அவை களக்காடு மலையில் வெட்டியெடுக்கப்பட்டதா எனத் தெரியவில்லை. அதை எங்கிருந்து வாங்கினார் என்றும் சொல்லவில்லை. அதனால் அவர்களையும் வைரத்தையும் மீண்டும் போலீசாரிடமே ஒப்படைப்பது என்ற திட்டத்திலிருப்பதாக" தெரிவித்தார். வைடூரியக் கல்லை பறிமுதல் செய்த களக்காடு இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சனிடம் கேட்டதில், "அந்த வைடூரியக் கல் பாறை துகள்கள் ஒட்டியபடி மின்னுகிறது. ராவாகத் தெரிகிறது. சுத்தம் செய்யப்பட வேண்டும் வெட்டியெடுத்தாகத் தெரிந்ததால் இது வனத்துறை சம்பந்தப்பட்டது என்பதால் மேற்கொண்டு விசாரிக்காமல் வைடூரியக் கற்களையும் அவர்களையும் வனத்துறையினரிடம் ஒப்படைத்து விட்டோம்" என்கிறார். சிக்கிய வைடூரியக் கல் பற்றி துணை இயக்குநர், மற்றும் இன்ஸ்பெக்டர் இருவரும் தெரிவித்தவற்றிலேயே முரண்பாடுகள் வெளிப்படுகின்றன. இதனிடையே ட்விஸ்ட்டாக இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த வனத்துறையினர் அவர்களை நாங்குநேரி கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு, பறிமுதல் செய்யப்பட்ட வைடூரிய கல்லை களக்காடு போலீசில் ஒப்படைத்திருக்கிறார்கள்.
களக்காடு மட்டுமல்ல, தென் மாவட்டத்தையே சூறாவளியாய் சுற்றி அடிக்கும் வைடூரியக் கல் கைப்பற்றல் விவகாரத்தின் மர்மத்தை விடுபட வைப்பதுடன் களக்காடு மலையின் விலைமதிப்பற்ற வைடூரியத்தை காக்கும் தலையாய கடமையும் விசாரணையும் அரசு மேற்கொள்ள வேண்டிய அவசிய தருணமிது. கஷ்டடி விசாரணையில் வைடூரியக் கல்லுடன் பிடிபட்ட சுசில்குமார், வேல்முருகனுக்கும் மண்ணுளி பாம்பு கடத்துகிற ஆந்திரா கேரளாவின் கும்பல்களுடன் தொடர்பு இருப்பதாகவும் தெரிகிறது. எனவே இவர்களுடன் தொடர்பில் உள்ள அந்த கும்பல்கள் பற்றியும் விசாரணை நடத்தி வருகிறோம் என்கிறார் களக்காடு வனத்துறை துணை இயக்குநர் ரமேஷ்வரன்.