Skip to main content

'உங்களைப்போல் நாக்பூருக்கு கட்டுப்பட்டவர்கள் அல்ல; நிதியை விடுவிக்க முடியுமா முடியாதா?-முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம் 

Published on 10/03/2025 | Edited on 10/03/2025
'We are not bound by Nagpur's words; can the funds be released or not?' - CM M.K. Stalin's statement

இன்று (10/03/2025) நாடாளுமன்றத்தில் மொழிக் கொள்கை தொடர்பாக பரபரப்பான காரசார விவாதம் நடைபெற்றது. 'மாநில அரசுக்கு நிதி வழங்க மறுப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது; புதிய கல்விக் கொள்கையை பின்பற்றாததால் தமிழகத்தை மத்திய அரசு பழிவாங்குகிறது' என திமுக எம்பி தமிழச்சி தங்க பாண்டியன் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ''தேசிய கல்விக் கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுவதாக வைக்கப்படும் குற்றச்சாட்டு தவறானது. தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் மாணவர்களை திமுக தவறாக வழி நடத்துகிறது. தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை மாநில அரசு பாழடித்து வருகிறது. பிஎம்ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட வந்த தமிழ்நாடு கடைசி நேரத்தில் யூ-டர்ன் போட்டது. மொழியை வைத்து அரசியல் செய்கிறார்கள். இவர்கள் ஜனநாயகம் அற்றவர்கள், அநாகரீகமானவர்கள் (un democratic, uncivilized) என இருமுறை குறிப்பிட்டார். மேலும், ''சூப்பர் முதல்வரின் பேச்சைக் கேட்டு கையெழுத்திட மறுத்தனர். யார் அந்த சூப்பர் முதல்வர் என்பதை கனிமொழிதான் கூறவேண்டும். பாஜக ஆளாத மாநிலங்களிலும் புதிய கல்விக் கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது'' என்றார்.

மத்திய கல்வி அமைச்சரின் பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்பிக்கள் மக்களவையில் 'தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி வேண்டும்' என முழக்கமிட்டனர். இதனால் சிறிது நேரம் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

'We are not bound by Nagpur's words; can the funds be released or not?' - CM M.K. Stalin's statement

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு பதிலளித்து திமுக எம்பி கனிமொழி பேசுகையில், ''உங்கள் பேச்சு எனக்கு வலியையும் காயத்தையும் தந்துள்ளது. தமிழர்கள் அநாகரிகமானவர்கள், நாகரீகமற்றவர்கள் என்ற வார்த்தையை திரும்பப் பெற வேண்டும். மும்மொழி கொள்கையை ஏற்பதாக திமுக எம்பிக்கள் ஒருபோதும் கூறியது இல்லை. தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசும், எம்பிக்களும் ஒருபோது ஏற்றதில்லை. தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என முதல்வர் ஏற்கனவே தெளிவாக கூறிவிட்டார்'' என எம்பி கனிமொழி தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பேசிய தர்மேந்திர பிரதான் கடும் கண்டனம் எழுந்ததை அடுத்து, 'காயப்படுத்தி இருந்தால் அநாகரிகமானவர்கள் என்ற வார்த்தையை திரும்பப் பெறுவதாக' தெரிவித்தார்.

mkstalin

இந்நிலையில்  மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள 'எக்ஸ்' வலைத்தள பதிவில், 'தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசும் ஒன்றியக் கல்வி அமைச்சர் அவர்களுக்கு நாவடக்கம் வேண்டும்! தமிழ்நாட்டின் நிதியைத் தராமல் ஏமாற்றும் நீங்கள் தமிழ்நாட்டு எம்.பி.க்களைப் பார்த்து அநாகரிகமானவர்கள் என்பதா?

தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்துகிறீர்கள். பிரதமர் மோடி இதனை ஏற்கிறாரா? NEP (புதிய கல்விக் கொள்கை), மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாடு அரசு அனுப்பிய PM SHRI MoU முற்றிலுமாக நிராகரித்து விட்டது என எனக்குக் கடிதம் எழுதியது நீங்கள் தானே? பிரதான் அவர்களே, நாங்கள் மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்துச் செயல்படுகிறோம்! உங்களைப் போல நாக்பூரின் சொற்களுக்குக் கட்டுப்பட்டு அல்ல! நாங்கள் உங்கள் திட்டத்தைச் செயல்படுத்த முன்வரவும் இல்லை, அப்படி முன்வராத என்னை யாரும் வற்புறுத்தவும் முடியாது. தமிழ்நாட்டு மாணவர்களுக்குரிய நிதியை, எங்களிடம் இருந்து வசூல் செய்த வரியை விடுவிக்க முடியுமா முடியாதா என்பதற்கு மட்டும் பதில் கூறுங்கள்' என காட்டமாக தெரிவித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்