திருச்சி தஞ்சை மெயின் ரோட்டில் உள்ள திருவரம்பூர், தூவாக்குடி ஆகிய பகுதிகளில் ஐடிஐ, பாலிடெக்னிக், மத்திய அரசின் என்.ஐ.டி ஆகிய கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. இந்த கல்வி நிறுவனங்களில் படிக்கும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள், திருவெறும்பூர் பகுதியில் வீடு எடுத்து தங்கியுள்ளனர். இந்த மாணவர்களுக்கு பல ஆண்டுகளானவே கஞ்சா சப்ளையை பல கும்பல்கள் செய்து வருகின்றனர்.
வாடகைக்கு வீடு எடுத்து தங்கி படித்து வரும் மாணவர்கள் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி வருவதாக நவல்பட்டு போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்தது. அதனைத் தொடர்ந்து திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கல்லூரி மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கும் தனியார் இடங்களை நவல்பட்டு இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் தலைமையிலான போலீசார் தீவிரமாக கண்காணிக்க தொடங்கினர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் குண்டூர் பகுதியில் நவல்பட்டு இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகப்படும்படியாக குண்டூர் பகுதியில் நின்ற புதுக்கோட்டை காளிதோப்பை சேர்ந்த கண்ணன் மகன் சக்திதாசன் (19), திருச்சி வடக்கு தாராநல்லூரை சேர்ந்த சிவலிங்கம் மகன் பாலமுருகன் (29), திருவெறும்பூர் அம்பாள்புரம் காலனியை சேர்ந்த பரமசிவம் மகன் சங்கை (16), வரகனேரி அப்துல்அஜீஸ் மகன் ஜாபர்அலி (27) ஆகிய 4 பேரையும் பிடித்து சோதனை செய்து பார்த்ததில் அவர்களிடம் தலா 50 கஞ்சா பொட்டலங்கள் வீதம் 200 கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை செய்ததில் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம், திருவப்பூரை சேர்ந்த ரத்தினம், அவரது மகன் தேவேந்திரன் ஆகிய இருவரிடமிருந்து கஞ்சா பொட்டலங்களை வாங்கி வந்து கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வருவதாக கூறியுள்ளனர். அதன் அடிப்படையில் 4 பேரையும் நவல்பட்டு போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வரும் ரத்தினம் மற்றும் தேவேந்திரன் மீதும் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். ஆனாலும் தொடர்ச்சியாக கஞ்சா விற்பனை செய்யும் கும்பல் வேறு வேறு ஆட்கள் துணையோடு அந்த பகுதியில் விற்று கொண்டு தான் உள்ளது.