திருச்சி நீதிமன்றத்தில் பணியாற்றும் வழக்கறிஞர் ஜெயந்திராணி, சித்ரா விஜயகுமார் ஆகியோர் இன்று மாலை திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் சமூக வலைதளங்களை பயன்படுத்தி இளம் பெண்களை கவர்ந்து சில கும்பல்கள் பாலியல் ரீதியான வன்முறைகள், மன ரீதியான வன்முறைகள், உடல்ரீதியான துன்புறுத்தல்கள், உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்துதல், வார்த்தைகளால், செய்கைகளால் துன்புறுத்தப்படுதல், செல்லிடை பேசி மூலம் டிஜிட்டல் தொழில் நுட்பங்களை பயன்படுத்தி ஆபாசமாக ஒலி,ஒளி பதிவினை செய்து சமூகவலைதளங்களில் வெளியிட்டு மிரட்டியுள்ளனர். அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இக் கும்பலால் எண்ணற்றவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு சுமார் 7 ஆண்டுகளாக பல பெண்களை அடித்து புணர்விற்கு வற்புறுத்தி பிற வகையில் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டுள்ள செய்திகள் ,சமூக வலைதளங்களில் வரும் வீடியோக்களை பார்த்த, நாளிதழ்கள் மற்றும் வார இருமுறை இதழ்களில் பிரசுரமான செய்தியினை படித்த எங்களை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டவர்கள், தொல்லை கொடுத்தவர்கள், பெண்களிடம் அச்சம் ஏற்படுத்தி , தயக்கம் கொடுக்கவும், புகார் கொடுப்பதையும் தவிர்ப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வார்கள்.
எனவே நீதி துறை சார்பில் குறை தீர்க்கும் அமைப்பு குறை முறையீட்டுக் குழு, சிறப்பு ஆலோசனையாளர்கள் நியமித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு பணிகளையும், ரகசிய காப்பையும் உருவாக்கி குழுவுக்கு , ஒரு பெண்ணை தலைமை ஏற்கச் செய்ய வேண்டும். மேல் நிலையில் இருந்து வரும் செல்வாக்கையும் வற்புறுத்தலும் தவிர்க்க குறை முறையீட்டு குழுவில் அரசு சார்பற்ற பாலியல் துன்புறுத்தல்கள் தொல்லைகள் பற்றிய பரிச்சயமான அமைப்பையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் . குறை முறையீட்டை பரிசீலிக்க குறிப்பிட்ட காலத்தில் இதை உறுதி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இந்நிகழ்வில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுத்து உண்மையான குற்றவாளிகளை தண்டித்தும் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கவும் வேண்டும் என கோரிக்கை மனுவை கொடுத்தள்ளனர்.