
சென்னையில் வழக்கறிஞர், தூத்துக்குடியில் பெட்ரோல் விற்பனை நிலைய மேலாளர் என தொடரும் படுகொலைகள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூக்கத்திலிருந்து விழித்து கூலிப்படைகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவது எப்போது? என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பெட்ரோல் விற்பனை நிலையத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்த நபர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சென்னை விருகம்பாக்கம் பகுதியில் மர்மமான முறையில் வழக்கறிஞர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பெண்களுக்கு நிலவும் பாதுகாப்பற்ற சூழல், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் தாராளப் புழக்கம், தமிழகத்திற்குள் நுழைந்து வழிப்பறியில் ஈடுபடும் வெளிமாநிலக் கும்பல், ஜாமினில் வெளிவரும் ரவுடிகள் படுகொலை என ஒட்டுமொத்த குற்றச் சம்பவங்களின் தலைநகரமாக தமிழகத்தை மாற்றிய திமுக அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் நடைபெறாத நாட்களே இல்லை என்ற சூழல் நிலவிக் கொண்டிருக்கும் நிலையில், சட்டமன்றத்தில் சிறிதும் வாய்கூசாமல் கொலைச் சம்பவங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறுவதாகவும், அவற்றை எதிர்க்கட்சியினர் ஊதிப் பெரிதாக்கி காவல்துறைக்கு இழுக்கு ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியிருப்பது அவரின் அறியாமையையே வெளிப்படுத்துகிறது. எனவே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறியாமை எனும் மாய உலகத்திலிருந்து விழித்தெழுந்து தமிழகத்தில் அரங்கேறும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை களைவதில் அதீத கவனம் செலுத்தி பொதுமக்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும் என வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.