
மதுரை தனக்கன்குளத்தை சேர்ந்த காளீஸ்வரன் என்பவரைக் கடந்த 22ஆம் தேதி (22.03.2025) இரவு 2 பைக்குகளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்யப்பட்ட காளீஸ்வரன் என்கிற கிளாமர் காளி மதுரை தனக்கன்குளம் திமுக முன்னாள் மண்டல தலைவர் குருசாமியின் உறவினர் மற்றும் ஆதரவாளர் என்று கூறப்படுகிறது.
திமுக மண்டல செயலாளர் குருசாமிக்கும், அதிமுக முன்னாள் மண்டல தலைவர் ராஜபாண்டியன் உறவினரான ஏ பிளஸ் ரவுடியாக வலம் வந்த வெள்ளை காளி என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து தெரியவந்தது. இந்த மோதல் காரணமாக மதுரை மாநகரில் பல கொலைகள் நடைபெற்றது தெரியவந்தது. வெள்ளை காளி தற்போது சிறையில் இருக்கும் நிலையில் வெள்ளை காளியின் ஏவுதலின் பேரில் இந்த கொலை நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் ஏற்கனவே ஜெயக்கொடி, கார்த்திக் உள்பட 7 பேரைத் தனிப்படை போலீசார் கைது செய்திருந்தனர்.
இந்நிலையில் ரவுடி வெள்ளைக்காளி குழுவில் இருந்த ரவுடி சுபாஷ் சந்திரபோஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மதுரையில் உள்ள கல்லூரி அருகே இந்த என்கவுண்டர் சம்பவம் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. காளீஸ்வரன் கொலை வழக்கில் தொடர்புடையவர் சுபாஷ் சந்திரபோஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கொலை தொடர்பாக ஒரு தனிப்படைகள் அமைக்கப்பட்டு ஆஸ்டின்பட்டி போலீசார் ரவுடி சுபாஷ் சந்திரபோஸை தேடி வந்தனர். அதோடு கிளாமர் காளி கொலை வழக்கிலும் ரவுடி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்புடையவர் ஆவார்.