கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே சாமியார் பேட்டை கடற்கரை உள்ளது இங்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது . இங்கு அரசு விடுமுறை நாட்கள் மற்றும் சனி ஞாயிறுகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதும். இந்த நிலையில் கடந்த செவ்வாயன்று சாமியார் பேட்டை கடற்கரைக்கு சாமியார் பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள பொது மக்கள் குளிக்க சென்றுள்ளனர். அவர்கள் கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது கால்களில் ஏதோ கடித்து போல் இருந்துள்ளது. உடனே காலை பார்த்த போது ரத்தம் லேசாக வந்துகொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி ஆனார்கள். உடனே அவர்கள் பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றனர்.
இதுகுறித்து சாமியார் பேட்டை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கூறுகையில், ஆழ்கடலில் உள்ள குப்பைகள் மற்றும் அழுக்குகள் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை ஆடி மாதங்களில் பருவநிலை மாற்றத்தால் வெளியேறும் , இந்த அழுக்குகளை தின்பதற்கு திருக்கை மீன், திம்பி மீன், சொறி மீன், உள்ளிட்ட மீன் வகைகள் கரைகளுக்கு படையெடுக்கிறது. இந்த மீன்கள் கரையில் இருப்பது தெரியாமல் சிலர் கடலுக்கு குளிக்க செல்லும் போது மிதித்து விடுகிறார்கள் . அதனால் மீனின் முட்கள் பட்டு காயம் ஏற்படுகிறது. கடித்த இடத்தில் தொடர்ந்து ரத்தம் வந்து கொண்டிருக்கும் வலி இருக்கும். இதற்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சரி செய்து கொள்ளலாம். உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. தற்போது கடற்கரையில் யாரையும் அனுமதிக்கவில்லை என கூறினார்கள்.