ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அடுத்த ஒழுகூர் கிராமத்தில் உள்ள கூட்டுறவு நியாய விலைக் கடையில், ஜனவரி 2-ஆம் தேதியான இன்று அரிசி வழங்கப்பட்டுள்ளது. அந்த அரிசியைப் பெற்ற அப்பகுதி மக்கள் அதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
அந்த அரிசியில் நிறைய சிறு சிறு கற்கள் இருந்ததோடு, வழக்கத்தை விட அதிகமாக துர்நாற்றம் வீசியுள்ளது. இதுபற்றி நியாயவிலைக்கடை விற்பனையாளரிடம் மக்கள் கேட்டபோது, "எங்களுக்கு அனுப்பியதை தான் போடுறோம், நாங்க என்ன செய்ய முடியும்" என்றுள்ளார்கள். மேலும், "அரிசியை மாற்றித் தரவும், திரும்பப் பெறவும் முடியாது. அதற்கு வாய்ப்பில்லை" எனவும் சொல்லியுள்ளார்கள்.
சமைத்துச் சாப்பிட முடியாத நிலையில் உள்ள அரிசியை நாங்கள் என்ன செய்வது என ஆத்திரமடைந்த அக்கிராமப் பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கடையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
இதுபற்றி காவல்துறைக்கும், ராணிப்பேட்டை வட்ட வழங்கல் அலுவலருக்கும் தகவல் சென்றதன் அடிப்படையில், அங்கு வந்த அதிகாரிகள், பேச்சுவார்த்தை நடத்தி, "நல்ல அரிசியாக இனி வழங்க ஏற்பாடு செய்கிறோம்" என சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், தரமற்ற அரிசியை நூற்றுக் கணக்கானவர்களுக்கு வழங்கியுள்ளனர் அதிகாரிகள். இந்த அரிசியைக் கொண்டு சமைத்துச் சாப்பிடவும் முடியாது. பொங்கல் பண்டிகையின் போது என்ன செய்வது என வேதனையை வெளிப்படுத்தியபடி சென்றனர் பொதுமக்கள்.