
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் இன்று (31.03.2025) வெளியிடப்பட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. மழை ஏதுவும் பதிவாகவில்லை. வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக சேலத்தில் 39° செல்சியஸ் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக தர்மபுரியில் 19.7° செல்சியஸ் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 4° செல்சியஸ் வரை குறைந்துள்ளது.
ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றம் ஏதுமில்லை. தமிழகத்தில் ஓரிரு இடங்களில், அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3° செல்சியஸ் வரை அதிகமாக பதிவாகியுள்ளது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது. தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 36 முதல் 39° செல்சியஸ் வரையிலும், வடதமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 32 முதல் 36° செல்சியஸ் வரையிலும், தென்தமிழக கடலோரப்பகுதிகளில் 34 முதல் 36° செல்சியஸ் வரையிலும், மலைப் பகுதிகளில் 23 முதல் 31° செல்சியஸ் வரையிலும் பதிவாகியுள்ளது.
அதே சமயம் தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. மேலும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே இன்றும், நாளையும் (01-04-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் (02-04-2025) முதல் ஏப்ரல் 4ஆம் தேதி (04-04-2025) வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏப்ரல் 5 (05-04-2025) மற்றும் ஏப்ரல் 6 ஆம் தேதிகளில் (06-04-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 35° செல்சியஸை வரை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.