இந்திய தொழில் கூட்டமைப்பினால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டுவரும், ‘தேசிய சிறந்த ஆற்றல் மேலாண்மை விருது’ இந்த ஆண்டு, தென்னக இரயில்வேயிலிருந்து பொன்மலை பணிமனை தேர்ந்தெடுக்கப்பட்டு, ‘சிறந்த ஆற்றல் திறனுடைய பணிமனை’ என விருது பெறவிருக்கிறது.
கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து, பொன்மலை பணிமனை இவ்விருதினைப் பெற்றுவருகிறது. இந்த வருடத்தில் போட்டியிட்ட இந்திய இரயில்வே உற்பத்தி மற்றும் பணிமனைகளில், பொன்மலை பணிமனை மட்டுமே இவ்விருதினை பெற்றுள்ளது.
இந்திய தொழில் கூட்டமைப்பானது ஆண்டுதோறும் இவ்விருதினை, எரிசக்தி மேலாண்மையில் சிறப்பாக செயல்படும் தொழிற்சாலைகளுக்குப் பல்வேறு பிரிவுகளில் விருது வழங்கிவருகிறது. கரோனா தொற்று காலத்திலும், பொன்மலை பணிமனை உற்பத்தியை 19.42% பெருக்கியதற்காகவும், 25.6% குறைவான எரிசக்தி உபயோகத்திற்காகவும், 46% எரிசக்தி குறைவான பொன்மலை மற்றும் மதுரை - திருவனந்தபுரம் இடையே ‘போகி’ போக்குவரத்திற்காகவும், மூன்று துணை மின் நிலையங்கள் மற்றும் 45 இயந்திரங்களில் இணைய வாயிலான எரிசக்தி மேலாண்மை அமைப்பினை நிறுவியதற்காகவும், 2 மியாவாகி (அடர்காடுகள்) காடுகளை நிறுவியதற்காகவும், (800 மரங்கள்) மற்றும் 400 முள்ளில்லா மூங்கில் மரங்களை நிறுவியதற்காகவும்,
28.87% கரியமிலவாயு வெளியீடு குறைப்பிற்காகவும் இவ்விருதினைப் பெற்றுள்ளது.