Skip to main content

எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்க நேரம் ஒதுக்க வேண்டும்..! - மாவட்ட சிறப்பு நீதிமன்றங்களுக்கு அறிவுறுத்தல்!

Published on 12/01/2021 | Edited on 12/01/2021

 

Time should be allotted to investigate cases against MPs and MLAs ..! - Instruction to the District Special Courts!

 

மாவட்ட சிறப்பு நீதிமன்றங்கள், எம்.பி, எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான குற்ற வழக்குகளின் விசாரணைக்கென குறிப்பிட்ட நேரம் ஒதுக்க வேண்டுமென, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

 

எம்.பி, எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில், அவற்றைக் கண்காணிப்பது தொடர்பாக, தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டுமென, அனைத்து மாநில உயர்நீதிமன்றங்களுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

 

இந்த உத்தரவின் அடிப்படையில், தாமாக முன்வந்து வழக்குப் பதிந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், நிலுவையில் உள்ள முன்னாள் மற்றும் இந்நாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான அவதூறு வழக்குகள் விசாரணையைத் துரிதப்படுத்தவும், கீழமை நீதிமன்றங்களில் அவர்கள் மீது நிலுவையில் உள்ள குற்ற வழக்கு விசாரணையை விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டிருந்தது.

 

இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

 

அப்போது உயர்நீதிமன்றப் பதிவாளர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த உத்தரவின்படி நிலுவையில் உள்ள எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மீதான அவதூறு வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தனி நீதிபதி சதீஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளதாக எடுத்துரைத்து,  வழக்கின் முன்னேற்றங்களைத் தாக்கல் செய்தார்.

 

தொடர்ந்து தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், தமிழகத்தின் 32 மாவட்டங்களில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றங்களையே சிறப்பு நீதிமன்றங்களாகச் செயல்பட அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளபோதும், ஏற்கனவே சம்பந்தப்பட்ட செஷன்ஸ் நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளதால், எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்கை விசாரிப்பதில் முன்னேற்றம் இல்லை எனவும், சென்னையில் உள்ள மூன்று சிறப்பு நீதிமன்றங்களில், ஒரு நீதிமன்றத்திற்கு இதுவரை நீதிபதி பணியிடம் காலியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

 

இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், எம்.எல்.ஏ க்கள், எம்.பி.க்கள் மீதான வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்தும் வகையில், மாவட்ட நீதிமன்றங்கள் இதற்கென குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி, இவ்வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுத்து விசாரிக்க வேண்டுமென உத்தரவிட்டதோடு, சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடத்தை நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறும் பதிவுத்துறைக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜனவரி 21ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்