வேலூர் சி.எம்.சி மருத்துவமனை ஏ-பிளாக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி பிசியோதெரபி சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் அவரது தந்தை அழகிரி மற்றும் குடும்பத்தினர் உடனிருந்து கவனித்து வருகின்றனர். அவர் சிகிச்சை பெற்று வரும் தளம் காவல் துறையினரின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்நிலையில், சி.எம்.சி மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு ஆக.10 இரவு வந்த ஒரு மின்னஞ்சலில் துரை தயாநிதிக்குக் கொலை மிரட்டல் குறிப்பு வந்துள்ளது. இதையடுத்து, மருத்துவமனை கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) கிரண் ஸ்ருதிக்கு மின்னஞ்சல் வழியாகவே புகார் அனுப்பி வைக்கப்பட்டது. மிரட்டல் விடுத்த நபர் தொடர்பாக சைபர் குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். அதேநேரம், துரை தயாநிதி சிகிச்சை பெற்று வரும் சி.எம்.சி ஏ-பிளாக்குக்கு கூடுதலாக ஓர் உதவியாளர் தலைமையில் 3 காவலர்கள் சீருடை அணியாமல் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டுள்ளனர்.
இது தொடர்பாகக் காவல் துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ''சி.எம்.சி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த மிரட்டல் மின்னஞ்சலில் இருந்த விவரம் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் காவல் கண்காணிப்பாளருக்கு மட்டுமே தெரியும். எங்களுக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
அதேநேரம், துரை தயாநிதி சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை தளத்திற்கு 3 காவலர்கள் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அங்குக் கூடுதலாக ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் 4 பேர் அடங்கிய சீருடை அணியாத காவலர்கள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டு அவர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மிரட்டல் மின்னஞ்சல் தொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது'' என்றனர்.