தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்த கண்டெய்னர்கள் பெட்டியைப் பறிமுதல் செய்து மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் சோதனை நடத்தினர். அதில் 'பஞ்சு கந்தல்' என்ற பெயரில் மோசடியாக ஆவணங்கள் தயாரித்து கப்பல் மூலமாக இந்தோனேசியாவிலிருந்து கொட்டைப் பாக்கு கடத்தப்பட்டது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த ஷிப்பிங் நிறுவன உரிமையாளர் ரவி பகதூர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தோனேசியாவின் ஜகார்த் துறைமுகம் வழியாக தூத்துக்குடி துறைமுகத்திற்கு கண்டெய்னர் பெட்டிகள் வந்து இறங்கியது. அப்போது நடத்தப்பட்ட சோதனையில் கொட்டைப் பாக்கு கடத்தப்பட்டது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட 65 டன் கொட்டைப் பாக்குகளின் மதிப்பு 4 கோடி ரூபாய் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடத்தலுக்கு சுங்க இலாகா அதிகாரிகள் சிலர் உடந்தையாக இருப்பதாகக் கூறப்படும் நிலையில் அது குறித்தும் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.